சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஆக்ஷன் அதிகம் நிறைந்த படமாக உருவாகியுள்ள ‘மதராஸி’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆனால் படத்திற்கு பெரிதாக எதிர்பார்ப்பு உருவாகவில்லை. இருப்பினும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காலை முதலே திரையரங்கில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்திருக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இவரது இசையில் வெளியான ‘சலம்பல’ பாடல் ஹிட்டடித்தது.
இந்த நிலையில் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் பார்த்து மகிழ்ந்துள்ளனர். மேலும் திரை பிரபலங்கள் ஷாலினி, பட ஹீரோயின் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட சில திரைபிரலங்களும் கண்டு மகிழ்ந்தனர். இவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காட்சி முடிந்து சிவகார்த்திகேயன் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “ரெஸ்பான்ஸ் நல்லாருக்கு. எல்லாருக்குமே நன்றி. தியேட்டருக்கு வந்து பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்” என்றார். அப்போது அவரிடம் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ரீதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி” மட்டும் தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த கதை முருகதாஸ் சாரோட டைரக்ஷன்ல, ஒரு ஆக்ஷன் எண்டர்டெய்னரா பண்ணனும் என்கிற முயற்சி தான். ஆடியன்ஸ் எங்கெல்லாம் கைதட்டுராங்களோ அதைபொறுத்து தான் படத்தோட ரெஸ்பான்ஸ் இருக்கும். அதை தெரிஞ்சிக்கத்தான் நானும் அனிருத்தும் வந்து பார்த்தோம். எந்த சீனுக்கெல்லாம் கிளாப்ஸ் வரும் என ஆசைப்பட்டேனோ, அது நடந்தது” என்றார்.