sivakarthikeyan ar murugadoss movie update

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயன் பிப்ரவரி 17 ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அதை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகத்தெரிகிறது.

இப்படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கை கோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் வில்லனாகத் துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளதாகப் பரவலாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. கன்னட படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர், தமிழில் விஜய் சேதுபதியின் 51வது படத்தில் நடிக்கிறார். இவரைத்தவிர்த்து இசையமைப்பாளராக அனிருத் சிவகார்த்திகேயன் படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பட பூஜை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.