சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் குறைவான எதிர்பார்ப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. இப்படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்திருக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இவரது இசையில் வெளியான ‘சலம்பல’ பாடல் ஹிட்டடித்தது.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 12.8 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து. இப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்திருந்தார். சிவகார்த்திகேயனை ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டுகிறார் எனக் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். அதே போல் ரஜினியும் ஆக்ஷன் ஹீரோ ஆகிவிட்டதாக சிவகார்த்திகேயனை பாராட்டியிருந்தார். இதனிடையே படத்தில் இருந்து ‘தங்க பூவே’ மற்றும் ‘சலம்பல’ வீடியோ பாடல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் மதராஸி படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதன் மூலம் நான்காவது ரூ.100 கோடி படத்தை சிவகார்த்திகேயன் கைவசம் வைத்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு முதல் ரூ.100 கோடி படமாக டாக்டர் படம் அமைந்தது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்று இந்த வசூலை எட்டியது. இப்படத்திற்கு அடுத்து வெளியான டான் படமும் ரூ.100 கோடி வசூலை எட்டியது, ஆனால் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதே போல் மதராஸி படத்துக்கு முந்தைய படமான அமரன் படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. அதற்கடுத்து வெளியான மதராஸி படம் கலவையான விமர்சனத்தை பெற்று ரூ.100 கிளப்பில் இணைந்துள்ளது.