
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்க மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே...’ இன்று(30.09.2024) வெளியாகவுள்ளது. இப்படம் வருகிற தீபாவளியான அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிங்கப்பூரில் நடந்த புரமோஷன் நிகழ்வில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர், ‘தி கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த காட்சியை சுட்டிக்காட்டி, “அடுத்த தளபதி நீங்களா?” என சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளிக்கையில், “படத்தை தியேட்டரில் பார்க்கும்போது செம்ம ரெஸ்பான்ஸ் கொடுத்தார்கள். நானும் உங்களைப் போல போக்கிரி படத்திற்கு டிக்கெட் இல்லாமல் தேடி வாங்கி பார்த்தவன்தான். அப்படி பார்த்த நான் அவரின் படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்தது சந்தோஷமாக இருந்தது. முதலில் அப்படி ஒரு சீன் நடிக்க வாய்ப்பளித்த விஜய்க்கும் வெங்கட் பிரபுவுக்கும் நன்றி.
ஒரே தளபதி தான், ஒரே தல தான், ஒரே உலக நாயகன் தான், ஒரே சூப்பர் ஸ்டார் தான். அடுத்தது, என்று சொல்வதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அவர்களின் படங்களைப் பார்த்துத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். அவர்களைப் போல நடித்து ஹிட் கொடுக்கலாம், அதற்காக அவர்களாகவே மாற வேண்டுமென நினைப்பது சரி கிடையாது. நான் அவர்களாக மாற வேண்டும் என நினைத்ததும் கிடையாது. அவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு எனக்காக சின்ன இடத்தை உருவாக்க நினைக்கிறேன்” என்றார்.
இதற்கு முன்பு விஜய் லியோ பட வெற்றி விழாவின் போது, மக்கள் திலகம்னா ஒருத்தர்தான், புரட்சி கலைஞர்னா ஒருத்தர்தான், உலகநாயகன்னா ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர்தான், தலன்னா அது ஒருத்தர்தான், தளபதினா உங்களுக்கு தெரியும் என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.