சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் குறைவான எதிர்பார்ப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘மதராஸி’. இப்படத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்திருக்க சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். வித்யுத் ஜம்வால் வில்லனாகவும் பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டிருந்தார். இவரது இசையில் ‘சலம்பல’ பாடல் மட்டும் ஹிட்டடித்தது.
ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 12.8 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து. இப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டு தெரிவித்திருந்தார். அவர் ஆக்ஷன் ஹீரோவாக சிவகார்த்திகேயன் மிரட்டுகிறார் எனக் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார். அதே போல் ரஜினியும் ஆக்ஷன் ஹீரோ ஆகிவிட்டதாக சிவகார்த்திகேயனை பாராட்டியிருந்தார்.
இதையடுத்து படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் டாக்டர், டான், அமரன் படத்திற்கு பிறகு ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த நான்காவது படமாக இப்படம் அமைந்தது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் கையில் போர்டு வைத்து சொல்வது போல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.