Skip to main content

தயாரிப்பாளருக்கு எதிராக வழக்கு; சிவகார்த்திகேயனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி 

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

sivakarthikeyan and gnanavel raja case postponed april13

 

கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதில், "மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், மீதமுள்ள ரூ.4 கோடியை பெற்று தர வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அந்த மனுவில் சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்வதற்கும், தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

 

இதனைத்தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பிலிருந்து, சிவகார்த்திகேயன் கட்டாயத்தின் பேரில் தான் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும், அதனால் தங்களுக்கு ரூ. 20 கோடி  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது  சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் பட நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்குமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதனை மறைத்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும்,  ஞானவேல் ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. இதை கேட்ட நீதிபதி சுந்தர்,  இது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வழக்கை வரும் ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.