கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையை சம்பவத்தை உருவாக்கியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம் சிங் உள்ளிட்ட பல இராணுவ வீரர்கள், காஷ்மீரிலுள்ள சோபியான் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தயராகி வரும் இப்படம் இந்தாண்டு தீபாவளியான அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் இராணுவ வீரராக நடிக்க மேற்கொண்ட உடற்பயிற்சி வீடியோவை கடந்த பிப்ரவரி 12ஆம்தேதி படக்குழு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 16ஆம் இப்படத்தின் டீஸர் வெளியாகியது. இந்த இரண்டு வீடியோக்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சமீபத்தில், சாய் பல்லவி இப்படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அமரன் படக்குழு படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. நாளை (15.08.2024) சுதந்திர தினம் கொண்டாடவுள்ள நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘போரை நினைவில் கொள்ள’, ‘போராட்டங்களை நினைவில் கொள்ள’என்ற தலைப்புகளுடன் படப்பிடிப்பில் சின்ன சின்ன காயங்களுடன் படக்குழுவினர் நடித்து வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. இறுதியில் ‘போர் செல்லும் வீரன், ஒரு தாய் மகன் தான்..., நம்மில் யார் இறந்தாலும், ஒரு தாய் அழுவாள்...’ என்ற பாடல் வரிகளுடனும் ‘தியாகத்தை நினைவில் கொள்ள’ என்ற தலைப்புடனும் முடிகிறது.