சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ளப் படம் ‘மதராஸி’. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர், விக்ராந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Advertisment

இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆடியோ உரிமையை ஜங்க்லீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘சலம்பல’ பாடல் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து ‘வழியுறேன்’ என்ற இரண்டாவது பாடல் கடந்த 23ஆம் தேதி வெளியானது. ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. பட வெளியீடு தொடர்பாக புரொமோஷன் பணிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் பல நேர்காணல்களைக் கொடுத்து வந்தார். இன்னமும் அதை தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “விஜய் சாருடன் துப்பாக்கி சீனில்(கோட் படம்) நடிச்சது, நிறைய பேருக்கு ரொம்ப சந்தோஷம். அந்த சீனை நான் எப்படி பார்க்குறேன்னா, நீ நல்லா பன்ற தம்பி, இன்னும் நல்லா பன்னுன்னு அவர் தட்டி கொடுக்குற மாதிரி தான் பார்க்கிறேன். ஆனால் ஒரு சிலர், அடுத்த தளபதி, குட்டி தளபதி, திடீர் தளபதின்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்குறேன். அவர் அப்படி நினைக்கிற ஆளாக இருந்தால் அவர் எனக்கு துப்பாக்கியை கொடுத்திருக்கமாட்டார். நானும் அதை வாங்கியிருக்க மாட்டேன். அண்ணன் அண்ணன் தான், தம்பி தம்பி தான். இந்த அளவில் தான் அவருடன் நான் இருக்கனும்னு நினைக்கிறேன். இதை எங்கெங்கையோ சொல்லி பார்த்தேன். சிலர் விடுவதாக தெரியவில்லை. மேலும் அவருடைய ரசிகர்களை நான் பிடுக்க நினைக்கிறேன்னு சொல்றாங்க. அப்படிலாம் யார் ரசிகரையும் யாரும் பிடிச்சுற முடியாது. ரசிகர் என்பது ஒரு பவர்” என்றார்.  

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு படம் நல்லா இருக்கு, எனக்கு புடிச்சு இருக்குன்னா கூப்டு பாராட்டினா, இவன் என்ன அவ்ளோ பெரிய ஆளான்னு கேக்குறாங்க. நல்லது பண்றதுக்கு நான் ஏன் யோசிக்கனும்” என்றார்.