
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே டெல்லியில் இராணுவ வீரர்களுக்காக படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அவர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் அமரன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் படம் குறித்து நிறைய விஷயங்களை பேசினார். அப்போது அரங்கில் இருந்த மாணவர்கள், துப்பாக்கி துப்பாக்கி என ஆரவாரம் செய்தனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயனிடம், ரசிகர்கள் துப்பாக்கி என கூச்சலிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “கோட் படத்தில் வந்த சீனை அவர்கள் சொன்னார்கள். அந்த காட்சி சினிமாவில் நடந்த அழகான விஷயம். அவர் ஒரு சீனியர் ஆக்டர். அடுத்த கட்ட நடிகருடன் ஸ்க்ரீன் ஷேர் செய்துக் கொண்டார்” என்றார். பின்பு அவரிடம் விஜய் போல் நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா என்ற தொனியில் ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “சினிமாவில் நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது” என்றார்.