சிவாஜி வீடு வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

sivaji house case update

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் 'ஈசன் ப்ரொடக்ஷன்' என்ற நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜெகஜால கில்லாடி' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட தயாரிப்பு பணிக்காக ஈசன் ப்ரொடக்ஷன், 3.74 கோடி ரூபாய் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த கடன் ஒப்பந்தத்தின் பொழுது ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பத் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நீதி மன்றம் சென்றது. அப்போது இந்த பிரச்சனை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்தியஸ்தர் கடன் தொகையை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உரிமைகளை பெற்றுக் கொண்டு கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் என்றும் மீதி தொகையை ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திடமே வழங்க வேண்டும் எனவும் மத்தியஸ்தர் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவின் படி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் கேட்ட பொழுது படம் இன்னும் முடிவடையவில்லை என ஈசன் ப்ரொடக்ஷன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் “எனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது ராம்குமாருக்கு அன்னை இல்லம் வீட்டின் மீது எந்த உரிமையும் பங்கும் இல்லை என்றும் எதிர்காலத்தில் அவ்வாறு எந்த உரிமையும் கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் படி ராம்குமார் தரப்பில் அன்னை இல்லத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அதை பிரபுவுக்கு சிவாஜி உயில் எழுதி வைத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் அடுத்த விசாரணை இன்று நடந்தது. அப்போது பிரபு தரப்பு வழக்கறிஞர் அன்னை இல்லம் வீட்டின் முழு உரிமையாளர் பிரபு தான் என்றும் அந்த வீட்டின் மீது ராம்குமாருக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்றும் மீண்டும் வாதிட்டார். மேலும் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு பல காலம் முன்பே சிவாஜி கணேசன் அந்த வீட்டை பிரபுவுக்கு உயில் எழுதி வைத்துவிட்டதாகவும் அதனடிப்படையில் பத்திரப்பதிவு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் பல கோடி மதிப்பிலான அன்னை இல்லம் வீட்டில் ராம்குமார் தனது உரிமையை விட்டுக்கொடுத்தார் என்பது நம்பும்படியாக இல்லை என்றனர். மேலும் அந்த சொத்தின் முழு உரிமையும் பிரபுவிற்கு இருக்கிறதா என்பதை முழுமையான விசாரணைக்கு பின்புதான் முடியும் என்பதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பிரபு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

MADRAS HIGH COURT prabhu Ramkumar Sivaji Ganesan
இதையும் படியுங்கள்
Subscribe