sivaji ganesan annai illam case update

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் 'ஈசன் ப்ரொடக்ஷன்' என்ற நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜெகஜால கில்லாடி' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட தயாரிப்பு பணிக்காக ஈசன் ப்ரொடக்ஷன், 3.74 கோடி ரூபாய் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த கடன் ஒப்பந்தத்தின் பொழுது ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பத் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நீதி மன்றம் சென்றது. அப்போது இந்த பிரச்சனை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்தியஸ்தர் கடன் தொகையை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உரிமைகளை பெற்றுக் கொண்டு கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் என்றும் மீதி தொகையை ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திடமே வழங்க வேண்டும் எனவும் மத்தியஸ்தர் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவின் படி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் கேட்ட பொழுது படம் இன்னும் முடிவடையவில்லை என ஈசன் ப்ரொடக்ஷன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் “எனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு பல கட்டங்களாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் கடைசியாக கடந்த மாதம் நடந்த விசாரணையில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டின் உரிமையாளர் பிரபுதான் என நீதிமன்றம் அறிவித்து வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனு இன்று இரண்டு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது சட்ட விதிகளை கருத்தில் கொள்ளாமல் ஜப்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது, அதனால் அந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த அந்த ரத்து உத்தரவை தடை செய்ய முடியாது எனவும் மேல்முறையீட்டு மனுவுக்கு பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம் குமார் ஜூன் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Advertisment