அசாமிய மொழியில் பல்வேறு பாடல்களை பாடி பிரபலமானவர் ஜுபீன் கார்க். மேலும் பெங்காலி மற்றும் இந்தி உட்பட 40 மொழிகளில் பாடியுள்ளார். பாடுவதை தாண்டி கிட்டார், டிரம்ஸ், தபேலா உள்ளிட்ட 12 இசைக்கருவிகளை வாசிக்கும் திறமையாளராக இருந்துள்ளார். அசாமிய பாடகர்களில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய பாடகராக இருந்து வந்தார். இதைத்தாண்டி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் வலம் வந்துள்ளார். 2006ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் நடிப்பில் இந்தியில் வெளியான ‘கேங்ஸ்டர்’ படத்தில் இவர் பாடிய ‘யா அலி’ பாடல் பெரும் ஹிட்டடித்தது. இதன் மூலம் பலரது கவனத்தை ஈர்த்து பிரபலமானார்.
சிங்கப்பூரில் இன்று மற்றும் நாளை நடக்கும் நான்காவது வடகிழக்கு இந்திய விழாவில் பாடுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். ஆனால் அங்கு ஆழ்கடலில் ஸ்கூபா டைவிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்டிருந்த அவர் முதலில் மூச்சு திணறலால் சிரமப்பட்டுள்ளார். பின்பு அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரை சோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவரது மறைவு வட இந்திய இசைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜுபீன் கார்க்(52) மறைவிற்கு பிரதமர் மோடி, “இசைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது பாடல்கள் அனைத்து தரப்பு மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக இருந்தன” என தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதே போல் அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும், “அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. வரும் தலைமுறைகளுக்கு, ஜுபீன் அசாமின் கலாச்சாரத்தின் உண்மையான வீரராகவும், படைப்பாற்றலின் கலங்கரை விளக்கமாகவும் நினைவுகூரப்படுவார்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜுபீன் கார்க்கின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலே அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு தற்போது இந்திய தூதரக அதிகாரிகள் முன்னிலையில், அவருடன் வந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை உடல் கொண்டு வரும் என கூறப்படுகிறது. இதனிடையே அவரது வீட்டில் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/20/231-2025-09-20-10-42-21.jpg)