
இந்தியில் பல பாடல்களை பாடி இந்திய அளவில் பிரபலமான பாடகராக இருப்பவர் சோனு நிகம். மற்ற இந்திய மொழிகளான தமிழ், பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். தமிழில் ‘வாராயோ தோழி...’ (ஜீன்ஸ்), ‘விழியில் உன் விழியில்...’ (கிரீடம்), 'ஆருயிரே...' (மதராசபட்டினம்) உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் மும்பையில் உள்ள செம்பூர் பகுதியில் நேற்று இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அதில் மேடையில் பாடிவிட்டு கீழே இறங்கியபோது ஸ்வப்னில் படேர்பேகர் மற்றும் அவரது நண்பர்கள் செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது சோனு நிகம் உதவியாளர்கள் ஸ்வப்னில் படேர்பேகரை தடுத்ததால் கோபமடைந்த அவர் சோனு நிகமின் உதவியாளர்களைத் தாக்கினார். ஸ்வப்னில் படேர்பேகர் சிவசேனா கட்சியின் எம்எல்ஏ பிரகாஷ் படேர்பேகரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிபட்ட சோனு நிகமின் உதவியாளர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ மகன் ஸ்வப்னில் படேர்பேகர் மீது பாடகர் சோனு நிகம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் எம்எல்ஏ மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து எம்எல்ஏ பிரகாஷ் படேர்பேகர் தற்போது, ‘என் மகன் செய்தது தவறுதான். அது தவறுதலாக நடந்துவிட்டது’ என மன்னிப்பு கோரியுள்ளார்.