Skip to main content

"தயவுசெய்து உங்களுக்கான டோஸ்களை தவறவிடாதீர்கள்" - மூத்த பாடகர் வேண்டுகோள்!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021

 

fsfaas

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். 

 

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், மூத்த பின்னணி பாடகர் மனோ கரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துவிட்டேன். தயவுசெய்து உங்களுக்கான தடுப்பூசிகளை தவறவிடாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள். மாஸ்க் அணியுங்கள். கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்துங்கள். மிக முக்கியமாக தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள். மனிதகுலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த யுத்தத்தை நாம் ஒன்றாக எதிர்த்துப் போராட முடியும்" என கூறியுள்ளார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனோவை கொண்டாடிய சிறப்பு விருந்தினர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
super singer 10 mano special

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் பாடகர் மனோவின் 40 வருடத் திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில்,  மனோ ஸ்பெஷல் சுற்று நடத்தப்பட்டது. இந்தியத் திரையிசையுலகில் 40 வருடங்களைக் கடந்திருக்கும் பாடகர் மனோ, இதுவரையிலும் 35000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்கள், முன்னணி நட்சத்திரங்கள், முன்னணி பாடகர்கள் என அனைத்து பிரபலமான கலைஞர்களுடன் பணியாற்றியுள்ளார். 3000க்கும் மேற்பட்ட நேரடி மேடை இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் நீதிபதியாகவும் கலந்துகொண்டு,  பல அறிமுகப் பாடகர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார். 

இந்நிகழ்ச்சியில் மனோவை கௌரவிக்கும் விதமாக, அவருக்காகவே இசைத் துறையிலிருந்து இசையமைப்பாளர் சிற்பி, மால்குடி சுபா, உண்ணி மேனன், கல்பனா முதல் பல இசை மேதைகள் கலந்துகொண்டனர். மேலும் ஒரு சிறப்பாக இதுவரை எந்த ஒரு மேடையிலும் அதிகமாகக் கலந்துகொள்ளாத, மனோவின் நண்பர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மனோவின் பாடல்களைக் கொண்டாடும் விதமாக சூப்பர் சிங்கர் ஜூனியர் முன்னாள் சீசன் 9 மற்றும் 10 போட்டியாளர்கள் இணைந்து, மனோவிற்காக ஒரு சிறப்பு சங்கீத நிகழ்வை அரங்கேற்றினார்கள். இந்நிகழ்வில் மனோவின் குடும்பத்திலிருந்து அவரது மகன், மனைவி உட்பட குடும்பத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இறுதியாக பாடகர் மனோ, இது என் வாழ்வில் மிக முக்கியமான மறக்க முடியாத சந்தோச தருணம் என்று தெரிவித்ததோடு, இந்நிகழ்ச்சியில் மிக அற்புதமாகப் பாடிய சஞ்சீவ் எனும் பாடகருக்குத் தனது கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார்.

Next Story

“மனசு வருத்தமா இருக்கு” - பாடகர் மனோ அதிருப்தி

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
singer mano press meet in musician election

தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல், கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில், இதுவரை வாக்குரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் வழக்கு தொடர்ந்த நிலையில் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். பின்பு தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்தது.

இதையடுத்து, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது. 2023 - 2026ஆம் ஆண்டிற்காக நடக்கும் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தீனாவை எதிர்த்து போட்டியிட்ட சபேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே பாடகர் மனோ வாக்களித்துவிட்டு இசைக் கலைஞர்கள் சங்கம் குறித்து செய்தியாளர்களிடம் அதிருப்தி தெரிவித்தது, தற்போது இசைத்துறையினர் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

அவர் பேசியதாவது, “கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்களிடம் வாசித்த கலைஞர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறாங்க. நோய்வாய்ப்பட்டதால் அவர்களால் நடக்க முடியாது. சினிமா துறையில் முதலில் தொடங்கப்பட்ட யூனியன் இசைக்கலைஞர்கள் யூனியன் தான். ஆனால், இதற்கு சரியான கட்டிடங்கள் கடந்த 5 வருஷமா எதுவும் இல்லை. இளையராஜா சார் எங்களுக்கு உதவி செய்யலாம் என்று பார்த்த போது, கோவிட் வந்தது.

இசைக்கலைஞர்களுக்கு அசோசியேட் உறுப்பினர்கள் இப்போது நிறைய உருவாயிருக்காங்க. எல்லா சங்கத்திலும் உறுப்பினர்கள் இறந்து போனால் ரூ. 4 லட்சம் கொடுக்கக்கூடிய நிலைமையில் இருக்காங்க. ஆனால் இசைச் சங்கம் ரூ.1 லட்சம் கொடுக்கக்கூடிய நிலைமையில் கூட இல்லை. அது மனசுக்கு ரொம்ப கஷ்டமான விஷயம். அதனால் இனிமே வரும் இளைஞர்கள் ஒன்றாக இணைந்து, சங்கத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும். 

முன்னாள் தலைவர் தீனா, முயற்சி எடுத்து பண்ணியிருந்தால் நிறைய மியூசிசியன் சப்போர்ட் பண்ணியிருப்பாங்க. ஆனால் யாருமே போய் கேட்கவில்லை. கோவிட் சமயத்தில் கூட யாரும் யாருக்கும் உதவி செய்யவில்லை. நான் தனிப்பட்ட முறையில் 250 பேருக்கு சாப்பாட்டுக்கான பொருட்கள் உதவியிருக்கேன். அந்தளவிற்கு கூட இந்த யூனியன் செய்யவில்லை. அதை நினைக்கும் போது தான் மனசு வருத்தமா இருக்கு. எது பண்ணாலும் தர்மம் வெல்லும். சுசீலா, ஜானகி, டி.எம்.எஸ். உள்ளிட்ட பலர் விட்டுப் போன சொத்து எவ்வளவோ இருக்கிறது. அதை நம்பி இருக்கும் கலைஞர்கள் நல்லா இருக்க வேண்டும்” என்றார்.