
ரஜினிகாந்த் காலா, 2.0 படங்களையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ரஜினியுடன் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இப்படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பது என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகிறது. அவ்வப்போது திரிஷா, நயன்தாரா, அஞ்சலி என்று முன்னணி கதாநாயகிகளின் பெயர்கள் அடிபட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி... 'மகள் வயது உடைய பெண்ணுடன் டூயட் ஆடுவதை நிறுத்திவிட்டதாக’ குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் தற்போது இந்த படத்தில் நடிகை சிம்ரன் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்ரன் ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர். ஆனால் அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் வாய்ப்பு பறிபோயிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவில்லை என்றும், அவர் படையப்பா நீலாம்பரி போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்றும் உலா வந்து கொண்டிருக்கிறது.