இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன், சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கத் தொடங்கினார். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ப்ரொமோ ஷூட் சென்னையில் கடந்த ஜூலையில் சில தினங்களுக்கு மட்டும் நடந்தது. இதில் இயக்குநர் நெல்சனும் இடம் பெற்றிருந்தார். இப்படத்திற்கு முன்பு சூர்யாவை வைத்து வாடிவாசல் படம் இயக்கவிருந்த நிலையில் அப்படம் தள்ளி போகிறது குறிப்பிடத்தக்கது.
சிம்புவை வைத்து அவர் இயக்கும் படம் வட சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகிறது. அதனால் வட சென்னை படத்தில் வரும் கதாப்பாத்திரங்களும் இதிலும் வருகின்றனர். இப்படம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் முன்பு வெளியானது. படத்திற்கு ராஜன் வகையரா என பெயர் வைத்துள்ளதாகவும் பின்பு சிம்பு இரண்டு லுக்கில் வருவதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக 10 கிலோ எடை குறைத்துள்ளதாகவும் உள்ளிட்ட தகவல்கள் இதில் அடங்கும். கடைசியாக, இப்படம் கைவிடப்படும் நிலமையை நோக்கி செல்வதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை விரைவில் அப்டேட் வரும் என வெற்றிமாறன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தனது அடுத்த படம் இன்னும் 10 - 15 நாட்களில் வரும் என்று கூறி இந்த படம் முடிந்த பின்பு வட சென்னை 2 வரும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெற்றிமாறன் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி தயாரிப்பாளர் தாணு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிம்பு படம் தொடர்பாக ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 80ஸ் கெட்டப்பில் சிம்பு கையில் கத்தியுடன் நடந்து செல்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் படக்குழுவின் பெயர்கள் அனைத்தும் வட சென்னை பட எழுத்து ஸ்டைலில் இருக்கிறது. சிம்புவின் 49வது படமாக உருவாகும் இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், “வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.