Advertisment

'என் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பமாட்டேன்' - சிம்பு சொன்ன காரணம் 

irumbu thirai.jpeg

Advertisment

simbu

வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து விவேக், தேவயாணி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எழுமின்'. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஷால், சிம்பு, கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது விழாவில் சிம்பு பேசியபோது...

"நான் பொதுவாகவே எந்த விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் மைக் தான். மைக் கையில் கிடைத்தால் நான் ஏதாவது ஓப்பனாக பேசிவிடுவேன். பின் அது ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பிவிடும். வாழ்க்கையில் ஒருவரை பிடிக்கும் என்று சொல்வதை விட, அவர்களை நாம் பின்பற்றுகிறோம் என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்படி செய்து காட்டுபவர் தான் விவேக். நான் எனது படம் ஒன்றில் ஒரு காமெடியனை அறிமுகம் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் விவேக் சார் தான் உச்சத்தில் இருக்கிறார் அதனால் அவரை இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார். ஆனால் நான் பிடிவாதமாக இருக்க, உடனே விவேக் சார் தயாரிப்பாளரிடம் பேசி சமாதான படுத்தி எனக்காக இந்த படத்தை விட்டுக் கொடுத்ததால் தான், சந்தானம் என்ற காமெடியன் இன்று சினிமாவில் இருக்கிறார். இந்த படத்தில் நடித்துள்ள குழந்தைகளுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க அனுமதி அளித்த பெற்றோருக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் என் மனதில் ரொம்ப நாட்களாக உள்ள ஒரு விஷயத்தை இப்போது சொல்கிறேன். என் குழந்தையை நான் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். படிக்க, கற்றுக்கொள்ள தான் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் அங்கேயோ முதலாவது வருபவனை மட்டும் தான் பார்க்கிறார்கள். அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. ஒரு குழந்தைக்கு படிப்பு வரவில்லை என்றால் அந்த குழந்தைக்கு அதனை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான பயிற்சி கொடுக்க முயற்சிப்பதில்லை. தண்டிக்க தான் செய்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் அவர்களது குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர அவர்களை ஊக்குவிக்க வேண்டும். நான் சினிமாவில் இந்த நிலைக்கு வர எனது பெற்றோர் தான் காரணம். அது போல் ஊக்குவிக்கும் பள்ளிகள் எங்கேயாவது இருந்தால் அந்த பள்ளியில் நம் பிள்ளைகளை சேர்க்கலாம்.

Advertisment

simbu

போட்டி, பொறாமை எதற்கு, எதை எடுத்துக் கொண்டு போகிறோம். மனதில் பட்டதை தான், நான் பேசுவேன். விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கும் போது, அவரது பேச்சில், முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை. அவர் மீது கோபப்பட்டு, திட்டியிருக்கிறேன். ஆனால் அவர் செய்த ஒரு விஷயம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் அனைத்துமே தவறா, நடிகர் சங்கம் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு மனிதாபிமானத்துடன் என்னை அழைத்த விஷாலுக்கு நன்றி. நான் திட்டுகிறேன் என்றால் அது வேறு ஆனால் விஷாலை பலரும் சும்மா திட்டுகிறார்கள். ஏஏஏ படத்திற்கும் நான் வாங்கிய திட்டை விட அதிகாமாக விஷால் திட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார். அவரை ஏன் திட்டுகிறார்கள் என்றும் கூட எனக்கு தெரியவில்லை. அந்த 'ஏஏஏ' எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த 'ஏஏஏ' என்று விஷாலை குறிப்பிட்டு...Arise, Awake, Achieve இதை தான் அவரிடம் பார்த்தேன். இங்கு விவேக் சார் நான் போஸ்டர் ஒட்டியதை பேசினார். என்னோட மிகப்பெரிய பலம் என்னுடைய ரசிகர்கள் தான். அப்பிடியான ரசிகர் ஒருவர் எப்போதும் என் படத்திற்கு கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்வார். அவரை நான் பலமுறை கண்டித்து இப்படி செய்யவேண்டாமென்றேன். அனால் அவர் கேட்கவில்லை. அப்படி அவர் வைக்கும் கட் அவுட்டிற்கு இடம் ஒதுக்கும் பிரச்சனையில் அவரை கொலை செய்துவிட்டனர். அது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. பேசி தீர்க்கவேண்டிய விஷயத்தை பெரிது படுத்தி இப்படி செய்து விட்டார்கள். அத விட எனக்கு பெரிய வருத்தம் என்னவென்றால் அந்த தகராறு விஷயத்தில் 9 பேர் கைதாகி இருக்கிறார்கள். இப்போது அந்த 9 பேரின் வாழ்க்கையும் வீணானது. இது தேவையா. மேலும் ஒருநாள் எதார்த்தமாக அவர் நண்பர்களை பார்த்தேன். போஸ்டர் ஒட்டிட்டு இருந்தாங்க. என்ன விஷயம் என்று கேட்டப்ப தான் இந்த விஷயத்தை சொன்னார்கள். அந்த ரசிகர் எத்தனை முறை எனக்காக கட் அவுட் வைத்திருப்பார். அதனாலத்தான் அவருக்காக போஸ்டர் ஒட்டினேன். இதை நான் பப்ளிசிட்டிக்காக பண்ணதாக பலர் சொல்கிறார்கள். ஆனால் நான் அதுக்காகவெல்லாம் பண்ணவில்லை. அதுமட்டுமில்லாமல் இனி தயவுசெய்து யாரும் யாருக்காகவும் கட் அவுட் வைக்காதீர்கள்.

அப்படி ஒரு உயிர் போகிறது என்றால் அப்படியாகப்பட்ட கட் அவுட் இனி தேவையில்லை. கொலை செய்யப்பட்ட என் ரசிகருக்காக நான் போஸ்டர் ஓட்டினேன். ரசிகர்காக தலைவன் போஸ்டர் ஓட்டுனான்னு அனைவரும் பேசட்டும். அதுமட்டுமில்லாமல் வரும் 24ஆம் தேதி ரசிகர்கள் அனைவரும் அந்த ரசிகர்காக ஒரு போஸ்டர் ஒட்டியோ, கட் அவுட் வைத்தோ அவன் பெற்றோருக்கு நாங்களும் உங்களுக்கு பிள்ளை மாதிரி எப்பவும் இருப்போம் என்பதை இதன் மூலம் செய்து காட்டுவோம். என்னால் ஒரு வருடத்திற்கு மூன்று படம் கொடுத்து அதன் மூலம் பெரிய ஸ்டார் ஆகமுடியும். ஆனால் அது எனக்கு தேவையில்லை. எனக்கு பிடித்ததை நான் மகிழ்ச்சியாக செய்கிறேன். அதே சமயம் என் ரசிகர்களுக்காக எனக்கு பிடித்த மாதிரி ஒரு சில படங்களில் இனி நடித்து கொள்கிறேன். எனக்கு அதுவே போதும். மேலும் ஒரு விஷயத்தில் நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனக்கு பிடித்த மாதிரி நான் இருந்து கொள்கிறேன். ஆனால் நான் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது பலருக்கு கஷ்டமாக இருப்பதாக சொல்கின்றனர். அப்படி இருந்தால், இனி நான் படப்பிடிப்பிற்கு தாமதமாக வர மாட்டேன். தற்போது தாமதமாக போவதுமில்லை என்று உறுதி அளிக்கிறேன்" என்றார்.

Simbu maniratnam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe