Skip to main content

“அது நிஜப் பாம்பு அல்ல...” - சிம்பு வீடியோ குறித்து படக்குழு விளக்கம்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

simbu

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல தடைகளுக்குப் பின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தலால் மீண்டும் ஷூட்டிங் தடைப்பட்டது.

 

தற்போது தமிழக அரசு சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து நவம்பர் மாதத் தொடக்கத்தில், 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் அறிவித்தார்.

 

இதனிடையே இருக்கும் ஒரு மாத இடைவேளையில் சூசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டு, திண்டுக்கல்லில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது முடிவடைந்துள்ளது. 'ஈஸ்வரன்' என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. 

 

சிம்பு தனது உடல் மாறுதலை, சர்ப்ரைஸாக ரசிகர்களுக்குக் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருந்து, தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவின் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் லீக்காகி வருகின்றன. 

 

இந்நிலையில், தினசரி சிம்பு தரப்பிலோ, அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து லீக்காகிய புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியாகிக்கொண்டே வருகிறது. இப்படத்தின் காட்சி ஒன்றில், சிம்பு பாம்பு பிடிப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி எடுக்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. இதனையடுத்து வனத்துறையில் ஒருவர் புகாரளித்திருந்தார். 

 

தற்போது விளக்கமளித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'ஈஸ்வரன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில், சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளியானது. உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்துப் படமாக்கினோம். அது படத்தில் நிஜப் பாம்பு போன்று கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்றவர்கள் மூலமாகவோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. கணினி கிராஃபிக்ஸ் செய்யும் போது, இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பது பற்றி விசாரித்து வருகின்றோம்.

 

இது சம்பந்தமாக, சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார், நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவுபடுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளோம். படத்தின் முழுப் படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டுதலைக் கடைப்பிடித்து நடைபெற்று வருகிறது. படம் சம்பந்தப்பட்ட செய்திகள், புகைப்படங்கள் அனைத்தும் ஊடகங்களுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்