/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/simbu-2.jpg)
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, திரு ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்துள்ளார். நடிகர் சிம்பு கொடுத்த ஒத்துழைப்பால் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன். மேலும், சிம்புவின் சினிமா வாழ்க்கையில் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் இசை நேற்று முன்தினம் வெளியானது.
வரும் பொங்கல் தினத்தன்று ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், "இனிய புத்தாண்டைத் தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும். ‘ஈஸ்வரன்’ பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கரோனா காலத்திலும் வெகு பிரயத்தனப்பட்டு உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில்நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டன. இது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கெட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதே சமயம் அண்ணன் விஜய், படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் 'மாஸ்டர்' படம் திரையரங்கில் வெளியாக வேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கியதளத்துக்கு அவர் செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் ‘மாஸ்ட’ரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.
#Master#Eeswaran#SpreadLove ?? pic.twitter.com/g6SOq1a1uE
— Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021
திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குகளுக்குப் பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள் 'மாஸ்டர்' படம் பாருங்கள், விஜய் அண்ணா ரசிகர்கள் 'ஈஸ்வரன்' பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம், நமது மன அழுத்தங்களிலிருந்து வெளிவர வேண்டும். அதற்கு இப்படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும்.
விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன். கடைகள், மால்கள், கடற்கரை என அனைத்தும் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன. திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்தப் பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழக முதல்வர் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)