Skip to main content

“‘மாஸ்டர்' படத்துக்கு முன் இது ஒன்றும் பெரிய படமல்ல..” - சிம்பு பட தயாரிப்பாளர் ஆவேசம்

 

simbu

 

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’. இந்த படம் நாளை (14/01/2021) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் நேற்று சிம்புவின் தந்தை டி.ஆர்., ‘ஈஸ்வரன்’ படத்தை வெளியிட விடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைத்தார். இதற்குப் பதிலடி தரும் வகையில் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் தயாரிப்பாளர் நேற்று (12/01/2021) மாலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

 

அதில், “‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத் தயாரிப்பின் போதும், வெளியீட்டின் போதும் என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இன்று டி.ராஜேந்தர் அதை முழுமையாகத் திசை திருப்பும் விதமாகப் பேசியுள்ளார். எத்தனை நாட்கள் சிம்பு படப்பிடிப்புக்கு வரவில்லை என்பது திரையுலகினருக்குத் தெரியும். 4 கதாபாத்திரங்கள் கொண்ட படத்தில், இரண்டில் மட்டுமே நடித்தார்.

 

இந்தப் படத்தை அப்படியே வெளியிடுங்கள், இதனைத் தொடர்ந்து இன்னொரு படம் சம்பளமில்லாமல் நடித்துத் தருகிறேன். அது உங்களுடைய நஷ்டத்தை ஈடுகட்டும் என்றார். அதனால்தான் அப்படியே வெளியிட்டோம். எதிர்பார்த்தபடியே படம் ஓடவில்லை. அப்போது கூட ஒருவாரத்தில் பத்திரிகையாளர்களை இணைந்து சந்திப்போம் என்றார். ஆனால், 5 மாதங்களாக அது நடக்கவே இல்லை.

 

பின்புதான் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, நடந்த அத்தனை விஷயங்களையும் சொன்னேன். அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். சுமார் 2 ஆண்டுகள் விசாரித்தார்கள். 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' இயக்குனர், மேலாளர் என அனைவரையும் விசாரித்து முடிவெடுத்தார்கள். என் பக்க நியாயத்தை உணர்ந்து ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது பணமாக ஈடுகட்ட வேண்டும் என்றார்கள். அப்போது 3 படத்தின் சம்பளத்தில் ஒரு தொகைக் கொடுத்து ஈடுகட்ட வேண்டும் என முடிவெடுத்தார்கள்.

 

தற்போது, 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் பழைய புகாரை முன்வைத்து புதிய புகார் கொடுத்தேன். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், இது தொடர்பாக என்ன வேண்டுமானாலும் பண்றோம் என்று இ-மெயில் செய்துள்ளார். சிம்புக்கு உள்ள 4 கோடி சம்பளப் பாக்கியில் கழித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லித்தான் கடிதம் பெற்றுள்ளார். இப்போது ஏதோ ஒரு நெருக்கடியில் மாற்றிப் பேசி வருகிறார்.

 

டி.ராஜேந்தர் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் என்கிறார். முழுமையாக விசாரித்துத்தான் தீர்ப்புக் கொடுத்தார்கள். யாரும் கட்டப் பஞ்சாயத்து பண்ணவில்லை. நாங்கள் பட வெளியீட்டைத் தடுக்கவில்லை. 4 கோடி ரூபாயில் 2.40 கோடி ரூபாய் கொடுங்கள் என்று பேசி முடித்து ஒப்புக்கொண்டுதான் தயாரிப்பாளர் சென்றார். ஆனால், சொன்னபடி நடக்கவில்லை என்பதால், க்யூப் நிறுவனத்துக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். யாருமே படத்தின் வெளியீட்டைத் தடுக்கவில்லை. 'மாஸ்டர்' வெளியாகும்போது இந்தப் படத்தை நிறுத்த வேண்டும் என்று திட்டமெல்லாம் இல்லை. அதே போல், 'மாஸ்டர்' படத்துக்கு முன் இது ஒன்றும் பெரிய படமல்ல.

 

இதுவரை ரொம்ப நியாயமாகச் சங்கங்களை நம்பியே போய்க் கொண்டிருக்கிறேன். டி.ஆர் மாதிரி மாற்றி மாற்றிப் பேசவில்லை. அமைச்சர் பேசினார் என்றெல்லாம் பொய்யான தகவலைப் பரப்புகிறார். அரசியல் ரீதியாகப் பிரச்சினை செய்கிறார் என்றெல்லாம் கற்பனையில் பேசிக்கொண்டிருக்கிறார். எப்போதுமே அவர்கள், சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதே கிடையாது. எந்த தயாரிப்பாளருக்குப் பிரச்சினையின்றி படம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள்?.

 

இதுவரை நான் தயாரித்த எந்தவொரு படத்தின் கலைஞர்களுக்கும் சம்பளப் பாக்கி வைத்ததில்லை. இந்த ஒரு படத்தைத் தயாரித்துவிட்டு இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன வார்த்தையை நம்பி படத்தை வெளியிட்டேன். இப்போது அனைத்து பிரச்சினைக்குமே நான்தான் காரணம் என்று திசை திருப்புகிறார்கள். டி.ஆர் ஏதோ நியாயவாதி, தர்மவாதி போல் பேசுகிறார். அதில் உண்மையே கிடையாது. எனது வாழ்க்கையை வீணடித்துவிட்டார்கள். 4 ஆண்டுகளாகப் படம் பண்ண முடியாமல் இருக்கிறேன். அவர் அடுக்கு மொழியில் பேசுவதால் தப்பு நியாயமாகிவிடாது” என்று தெரிவித்துள்ளார்.