Skip to main content

“அமைதியா இருங்க... ரொம்ப நாள் கழிச்சுப் பேசுறேன்" - 'மாஸ்' காட்டிய STR!

 

Simbu -Mass Speech- on Easwaran- Audio Launch


சுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சிம்பு, நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ஈஸ்வரன்'. மிகக் குறுகிய காலத்தில், உருவாக்கப்பட்ட இந்தப் படம், வருகிற பொங்கல் ரிலீசாக, ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. படரிலீசுக்காக திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

 

இந்நிலையில், நேற்று (02.01.2021) சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், சிம்பு, சுசீந்திரன், பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிம்பு, பேசுவதற்காக மேடையில் மைக்கை பிடித்த போது, அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷமிட்டனர், சத்தமிட்டனர். பேசத்தொடங்கிய பின்பும் கூட இடையிடையே சத்தமிட, “ரொம்ப நாள் கழிச்சுப் பேசுறேன், கொஞ்சம் அமைதியா இருங்க...” என்று உரிமையுடன் சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

 

விழாவில் நடிகர் சிம்பு பேசியது... 

"இந்தப் படத்துக்கு முன், நான் எப்படி இருந்தேன், இப்போது நான் எவ்வாறு இப்படி ஆனேன், எப்படி இந்தப் படம் முடிந்தது, எப்படி பொங்கலுக்கு வருகிறது என்று பலரும் வியப்போடு கேட்டார்கள். சத்தியமாக இதற்கான பதில் தெரியவில்லை. லாக்டவுன் காலத்தில் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பை எப்போது மறுபடியும் தொடங்குவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் எண்ணிக்கை கூடுதல் என்பதால், அப்போது அது சாத்தியமாகவில்லை. எனினும் விரைவாக ரசிகர்களுக்காக ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது.

 

ஏற்கெனவே, இயக்குனர் சுசீந்திரனிடம் ஒரு படம் குறித்துப் பேசியிருந்தேன். இந்நிலையில், மீண்டும் அவரிடம் என்னுடைய புதிய யோசனையைத் தெரிவித்தபோது, அவர் சரியென்று சொன்னார். வீடியோ காலில் பேசிய அவர், என்னிடம் ‘ஈஸ்வரன்’ படத்தின் கதையைச் சொன்னார். லாக்டவுன் நேரத்தில், அனைவருமே ஒருவித மன உளைச்சலில் இருந்தோம். ஒரு நெகட்டிவான சூழலில் இந்த கதையைக் கேட்டபோது, ஒரு பாசிட்டிவ் எண்ணம் எனக்குள் உருவானது. கதையைக் கேட்ட எனக்கே இவ்வளவு பாசிட்டிவ் எண்ணம் உருவாகிறது என்றால், இந்தப் படம் வெளியானால், மக்களுக்கும் பாசிட்டிவாக இருக்குமே எனத் தோன்றியது. அப்படி உருவானதுதான் ‘ஈஸ்வரன்’ படம்.

 

இப்போது எங்கு பார்த்தாலும் நெகட்டிவான சிந்தனைகள், பொறாமை, யாராவது எதையாவது செய்தால் அதைக் குறை சொல்லவே ஒரு கும்பல் இருக்கிறது. தயவுசெய்து அட்வைஸ் சொல்வதை நிறுத்துங்கள். இங்கு அனைவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அனைவருக்கும் ஏதோ ஒரு வலி, கஷ்டம் இருக்கும். ஏதோ ஒன்றை நோக்கி அனைவருமே போய்க் கொண்டிருக்கிறோம். முதலில் உங்கள் அருகில் இருப்பவர்களின் அறிவுரையைக் கேட்பதை முதலில் நிறுத்துங்கள்.

 

Simbu -Mass Speech- on Easwaran- Audio Launch

 

என்னுடைய ரசிகர்களுக்கு நண்பனாக ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்கிறன். வெளியே எப்படி இருந்தாலும், உள்ளே (மனதை) சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே சுத்தமாக இருந்தால், எல்லாம் தானாக நடக்கும். என் வாழ்க்கையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் உள்ளே வலி இருந்ததால்தான், என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. ஷூட்டிங்கிற்கு சரியாகப் போகமுடியவில்லை. இறைவன் வேறெங்கும் இல்லை, நம் உள்ளத்தில்தான் இருக்கிறான். நான், உள்ளே உள்ள பிரச்சனைகளை சரி செய்ததும், அனைத்தும் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. அனைவரிடத்திலும் அன்பாக இருங்கள். போட்டி, பொறாமை, சண்டை இவை எதுவும் வேண்டாம்.

 

இசையமைப்பாளர் தமன் என்னுடன், 'ஒஸ்தி', வாலு' ஆகிய இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போதைய இந்த காலகட்டத்தில், தமன் என்மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தார். எனக்குத் துணையாக இருந்தார்.

 

cnc

 

இயக்குனர் பாரதிராஜாவைப் பார்த்ததும் எனக்கு பயங்கரமான எனர்ஜி கிடைத்தது. இந்த வயதிலும், அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பணியாற்றுவதைப் பார்க்கும்போது, நான் இன்னும் எவ்வளவு தூரம் ஓடவேண்டும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன். அதேபோல, காமெடி நடிகர் பால சரவணன் இப்படத்தில் என்னுடன் பணியாற்றியுள்ளார். சந்தானத்தோடு நான் நடித்த காட்சிகள் எப்படி வரவேற்பை பெற்றதோ, அப்படி பால சரவணனோடு நடித்த காட்சிகளும் வரவேற்பை பெரும்.

 

நான் ஏற்கனவே சொன்னதுபோல, பிறரைக் கவிழ்க்க, அழிக்க நிறையத் திட்டம் போடுகிறார்கள். அதுவெல்லாம் எப்போதும் வேலைசெய்யாது. மேலே, இருப்பவன் (இறைவன்) இதைப் பார்த்துச் சிரித்துவிடுவான். ஆகையால், திட்டமிடல் வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையில் திட்டமிடலை விடத் தயாரிப்புகள் சரியாக இருந்தால் போதுமானது, வென்றுவிடலாம். இனி பேச ஒன்றுமில்லை, செயலில் தான் காட்டவேண்டும்.

 

நிறைய விசயங்களை இந்தப் புதுவருடத்தில் ஆரம்பிக்கப் போகிறேன், கொஞ்சம் காத்திருங்கள்!" இவ்வாறு பேசினார்.