simbu helped andhra telangana flood releif

Advertisment

ஆந்திர மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள், ட்ரொன்கள், ஹெலிகாப்டர் மூலம் அரசாங்கம் சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆந்திராவில் மழை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மற்றும் தெலங்கானா முதல்வர்களின் நிவாரண நிதிக்கு பலரும் உதவி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் ஆந்திரவுக்கு ரூ. 25 லட்சம் கொடுத்தனர். மேலும் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் ஆந்திராவுக்கு ரூ.25 லட்சமும் தெலங்கானாவுக்கு ரூ. 50 லட்சமும் கொடுத்தனர்.

இதையடுத்து ஜுனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோர் இரண்டு மாநிலங்களின் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் கொடுத்தனர். இந்த நிலையில் சிம்பு வெள்ளப் பாதிப்பு காரணமாக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில வெள்ளப் பாதிப்புகளுக்கு முதல் தமிழ் நடிகராக உதவி செய்துள்ளார் சிம்பு.