Advertisment

சிறுவயது கஷ்டம்... பீப் சாங் ரிலீஸ்... ரெட் கார்டு சூழல் - எமோஷ்னலான சிம்பு

simbu emotional speech at thug life audio launch

Advertisment

நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் சிம்பு, ரஹ்மான் குறித்து பேசுகையில், “ரஹ்மான் சாருடன் நான் நிறைய ட்ராவல் பண்ணியிருக்கேன். ஒரு கட்டத்தில் பீப் சாங் வெளியான போது ரொம்ப கஷ்டமான நேரம், அப்போது தள்ளி போகாதே பாடலை எனக்காக கொடுத்தார். முதல் முறையாக எங்க அப்பா படத்தை தாண்டி வெளியில் ஒருவருடைய படத்தில் பாடினேன் என்றால் அது ரஹ்மான் சாரின் இசையில் தான். அவர் தான் எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். அவர் என்னநினைத்து வாய்ப்பு கொடுத்தார் என்று தெரியவில்லை. அவரால் தமிழ், தெலுங்கு, இந்தி என 150 பாடல்களை பாடியிருக்கேன்” என்றார்.

தொடர்ந்து மணிரத்னம் குறித்து பேசுகையில், “அவர் இயக்கிய அஞ்சலி படத்தில் ஒரு தெலுங்கு நடிகர் நடித்திருப்பார். அந்த படத்தை பார்த்துட்டு, ஏன் என்னை மணி சார் இந்த படத்தில் நடிக்க கூப்பிடவில்லையென்று எங்க அப்பாகிட்ட அழ ஆரம்பித்து விட்டேன். உடனே அவர் சில காரணங்களை சொல்லி என்னை ஆறுதல் படுத்தினார். அப்போது, இனிமேல் மணிரத்னம் நம்மை கூப்பிடவே மாட்டார் என நினைத்தேன். நான் வளர்ந்த பிறகும் அப்படித்தான் நினைத்தேன். ஏனென்றால் நான் நடித்த படங்கள் எல்லாம் மாஸ் மசாலா ஜானர். பின்பு என் மீது ரெட் கார்டு விதிக்கும் சூழல் வந்தது . அந்த சமயத்தில் என்னை வைத்து படமெடுக்க நிறைய தயாரிப்பாளர்கள் பயந்தார்கள். அப்போது கூட மணிரத்னம் கூப்பிட்டார். என்னால் நம்பமுடியவில்லை. பின்பு அவரை பார்த்ததும் உண்மையிலே நீங்க தான் கூப்பிட்டீங்களான்னு கேட்டேன். நான் தான் கூப்பிட்டேன் என சொன்னார். தயாரிப்பாளர்கள் பயந்த போதும் என் மேல் நம்பிக்கை வைத்து கூப்பிட்ட மணிரத்னத்தை மறக்க மாட்டேன்.

Advertisment

செக்கச் சிவந்த வானம் மட்டும் இல்லை, நிறைய படங்களுக்கு கூப்பிட்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்துக்கும் கூப்பிட்டார். சில காரணங்களால் பண்ணமுடியவில்லை. தக் லைஃப் படத்துக்கும் கூப்பிட்ட போது கெட்டப் காரணங்களால் முதலில் பண்ண முடியாமல் போனது. அப்புறம் திரும்பவும் கூப்பிட்டார். உடனே போய்விட்டேன். அவர் என்னுடைய காட் ஃபாதர் மட்டுமல்ல. என்னுடைய குருவும் கூட” என்றார்.

பின்பு அவருடைய தந்தை டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ராஜேந்தருக்கு நன்றி தெரிவித்தார். அது குறித்து பேசுகையில், “சின்ன வயதில் எல்லா பசங்களுக்கும் அவரது பெற்றோர் சாக்லேட் வாங்கி கொடுத்து வெளியே கூப்பிட்டு போவாங்க. ஆனால் எனக்கு பிறந்ததில் இருந்தே எங்க அப்பா என்னை நடிக்க சொன்னார். அப்போது, மத்த பசங்க மாதிரி நம்ம இல்லாம, டெய்லியும் ஷூட்டிங், படிப்புனு போறோமேன்னு யோசிப்பேன். அப்போதுலாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனால் இன்னைக்கு 40 வருஷம் கழித்து கமல் சாருடன் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்திருக்கு. நடிக்க போகும்போது எல்லோரும், சிம்புவுக்கு நடிக்க, பாட, டான்ஸ் ஆட என எல்லாமே தெரியும் என சொன்னாங்க. அதுக்கு காரணம் எங்க அப்பா, அம்மா. அவங்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு எங்க அப்பாவை வர வேண்டாம் என சொன்னேன். வந்தால் அவர் எமோஷ்னலாகி விடுவார். ஆனால் இப்போது நான் எமோஷ்னல் ஆகிவிட்டேன்” என கண்கலங்கியப்டியே எமோஷ்னலாக பேசினார்.

பின்பு அவரது ரசிகர்கள் குறித்து பேசுகையில், “நான் சொல்லியிருந்தேன். உங்களை பெருமை படுத்துற மாதிரி இனிமேல் நடந்து கொள்வேன் என்று. அதற்கான ஆரம்பம் தான் இந்த தக் லைஃப். கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்து கொள்கிறேன்” என்றார்.

Thug Life actor simbu ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe