
பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளரான காமெடி நடிகர் வி.சுவாமிநாதன் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழ்த் திரையுலகில் கரோனா காரணமாக நிகழும் முதல் மரணம் இது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் சிம்பு தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...
"தயாரிப்பாளர் திரு. எல். எம். எம். சுவாமி நாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர், புத்திசாலி. எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர். நட்புக்கு இலக்கணமானவர். சிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாக பார்த்து கொண்டவர். இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, எனது தேவைகளையறிந்து சகோதரனைப் போல் நடத்தி படப்பிடிப்பையும் முடித்து வந்தார். நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால் இப்படியொரு சில நாட்களில் விடைபெற்று செல்வாரென தெரியாது. மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல்கூட சொல்லமுடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது. அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுக்கு என்றும், எந்தகாலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதனை இழந்திருப்பதில் வருத்தமடைகிறேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும், திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்து கொள்கிறேன். மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும். வேண்டிக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.