/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/416_16.jpg)
நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படக்குழுவினர் தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு பேட்டியில் சிம்பு தன் மீது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது, “மணிரத்னம் படம் என்றால் சரியான நேரத்துக்கு படப்பிடிப்பிற்கு செல்வதாக என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். மேலும் அவர் மேல் தனக்கு பயமா... அல்லது அவர் ஸ்டிரிக்ட்டா... என கேட்கின்றனர். சத்தியமாக அவர் மேல் பயம் கிடையாது. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். சொன்ன காலகட்டத்திற்குள் படத்தை எடுத்து முடித்து விடுவார். சொன்ன நேரத்துக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவார். ஸ்பாட்டுக்கு வந்து எதையும் யோசிக்க மாட்டார். என்ன பிளான் பண்ணியிருக்கமோ அதை கரெக்டாக எடுப்பார். நடிகர்களின் கால்ஷீட் மற்றும் நேரத்தை அவர் வீணடிக்க மாட்டார். அவர் படம் என்றால் சம்பளம் சரியாக வந்துவிடும். படமும் சொன்ன தேதியில் ரிலீஸாகும். இத்தனை வருஷம் அவர் இதை சரியாக ஃபாலோ செய்யும் போது எந்த நடிகர் லேட்டாக வருவார்.
செட்டில் நடிகர்கள் எவ்வளவு தூரம் இருந்தாலும் எழுந்து வந்து இதுதான் தனக்கு வேண்டும் என கேட்பார். சில இயக்குநர்கள் இது போன்று பண்ணுவதில்லை. மணிரத்னம் போன்று எனக்கு இயக்குநர்கள் கிடைத்திருந்தால், நிறைய படங்கள் நான் நடித்திருப்பேன். என்னுடைய ரசிகர்களும் சந்தோஷப்பட்டிருப்பார்கள். நான் படம் நடிக்காமல் வீட்டில் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் எனக்கு சினிமாவை தவிற எதுவும் தெரியாது. நான் ஷூட்டிங் போகாமல், படம் நடிக்காமல் வீட்டில் உட்கார்ந்திருந்து நான் என்ன பண்ணப்போறேன். அதனால் மக்கள் அப்படி நினைப்பது ரொம்ப தவறான விஷயம்.
ஒருவரைப் பற்றி நல்ல விஷயங்கள் இருந்தால் அதை வெளியில் சொல்லலாம். அதே சமயம் கெட்ட விஷயங்களும் இருக்கிறது. அதைப் பற்றி வெளியில் சொல்ல விரும்பவில்லை. அதனால் தான் என்னைப் பற்றி இது போன்ற பேச்சுகள் எழுகிறது. மணிரத்னம் இன்னும் மூணு படத்துக்கு என்னை கூப்பிட்டால் கூட, அனைத்து படத்தையும் விட்டுவிட்டு அவருக்காக கண்டிப்பாக போய் நடிப்பேன். அவ்வளவு மரியாதை அவர் மேல் நான் வைத்திருக்கிறேன்” என்றார். மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக சிம்பு நடித்துள்ள படம் தக் லைஃப். இதற்கு முன்னாடி செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)