வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் மாநாடு. இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்க எஸ்.ஜே சூர்யா, எஸ்.ஏ சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப் ஜானரில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் கடந்துள்ளது. இதையொட்டி படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் பக்கத்தில், “மாநாடு படத்தின் வெற்றி, அடையாளமாக நிறைய மாற்றங்களை உருவாக்கியது. தடைகள் தாண்டிய படம் பல நல்ல நிகழ்வுகளை தமிழ்சினிமாவிற்கு தந்தது. கொரோனாவிற்குப் பிறகு மக்களை திரையரங்கிற்கு கூட்டங் கூட்டமாக வரவைத்தது. ரிப்பீட் மோடில் படம் பார்க்க வைத்தது, விநியோகஸ்தர்கள்... திரையரங்குகளின் ஓனர்கள் என யாவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது... இளவல் சிம்பு .. எனக்கு... இயக்குநர் வெங்கட் பிரபு... தொழில் நுட்பக் கலைஞர்கள் என எல்லோருக்கும் வாழ்க்கையின் ஏற்றத்தையும்.. மாற்றத்தையும் தந்த படம்” எனக் குறிப்பிட்டு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிம்பு, “மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் இப்போதும் ஸ்பெஷலாக இருக்கிறது. அற்புதமான பயணத்திற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.