/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/53_68.jpg)
நாயகன் படத்திற்கு பிறகு நீண்ட இசைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படம் மூலம் மணிரத்னம் - கமல்ஹாசன் இருவரும் கூட்டணி வைத்துள்ளனர். இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் சிம்பு படம் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் தனது அனுபவங்களை பகிர்ந்திருந்தார். அப்போது கமல் குறித்து பேசிய அவர், “கமலை குருவாக நிறைய பேர் பார்க்கிறோம். ஆனால் அவர் இன்னும், தன்னை ஒரு மாணவன் என்று தான் சொல்கிறார். மாணவனாக இருந்தாலும் ஒரு திறமையான மாணவன் கிட்ட கத்துக் கொள்வதில் தப்பில்லை. அதனால் அவர் மாணவனாக இருந்தாலும் அவர் கிட்ட தான் நாங்கள் கத்துப்போம்.
இந்த படத்தில் ஒரு சீன் இருக்கிறது. ட்ரைலரில் பார்த்துருப்பீங்க. மழையில் ஒரு குடை பிடித்துக் கொண்டு நானும் கமல் சாரும் பேசிக்கொண்டு இருப்போம். அந்த சீன் ஷூட் பண்ணும் போது மணிரத்னம், ஒரு டயலாக் கொடுத்து கமல் மாதிரி இமிடேட் பண்ணி பேசுங்க என்று சொன்னார். நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆனால் கமல் சாரை பக்கத்தில் வைத்துக் கொண்டே எப்படி அவர் மாதிரி பேசுவது என ஒரே தயக்கம். இருந்தாலும் ஷாட் ரெடியானதும் முதலில் ஒரு மாதிரி கம்மியாக நடித்தேன். அதை பார்த்துவிட்டு மணிரத்னம், கமல் சார்கிட்ட சொல்லிவிட்டார். உடனே கமல் சார், என்னிடம் வந்து இதுமாதிரி பன்னுங்கன்னு சொல்லி கொடுத்தார். பின்பு அவர் சொல்லிக் கொடுத்த மாதிரி நடித்தேன். அந்த சீனை தியேட்டரில் பார்க்கும் போது ரசிகர்கள் நல்ல என்ஜாய் பன்னுவாங்க.
அதே மாதிரி இன்னொரு சீனில் கமல் சாரை கழுத்தை பிடித்து நடிக்க வேண்டும். எனக்கு சாதாரணமாகவே கமல் சாருடன் நடிக்க வேண்டுமென்றால் ஒரு சின்ன டென்ஷன் இருக்கும். இதில் கழுத்தை பிடித்துக் கொண்டு நடிப்பது என்றால் யோசித்து பாருங்கள். ஷாட் ரெடியானதும் முதலில் லைட்டாக கமல் சாரின் கழுத்தை பிடித்தேன். உடனே மணிசார் கட் சொல்லிவிட்டு கிட்ட வந்து சரியாக புடி சிம்புன்னு சொன்னார். உடனே நான், நீங்க ஜாலியா சொல்லிட்டீங்க, கமல் சாரின் கழுத்தை எப்படி பிடிப்பது என்றேன். அது ஸ்கீரின் பார்க்கும் போது நன்றாக இருப்பதாக சொல்லி கழுத்தை அழுத்தி புடிக்க வேண்டும் என்றார். அவர் விடுவதாக தெரியவில்லை. உடனே அடுத்த டேக்கில், முதல் டேக் போல இல்லாமல் கொஞ்சம் அழுத்தமாக பிடித்தேன். அப்பவும் மணிசார் ஒத்துக்கவில்லை.
இனிமேல் சரியாக பிடிக்கவில்லை என்றால் அவர் நம்ம கழுத்தை பிடித்துவிடுவார் என்று எனக்கு தெரிந்தது. அதனால் கமல் சாரிடம் பெர்மிஷன் கேட்டுவிட்டு நடிக்க ரெடியானேன். ஆக்ஷன் சொன்னதும் அவர் கழுத்தை நல்லா அழுத்தமாக பிடித்து விட்டேன். உடனே கமல் சார் பயங்கரமா ரியாக்ஷன் கொடுத்தார். அவர் கொடுப்பதை பார்த்ததும் உண்மையிலே நம்ம ரொம்ப அழுத்தி பிடித்துவிட்டோமோ என்று பயந்தேன். அதே சமயம் கழுத்தை விட்டோம் என்றால் மணி சார் கோச்சிக்குவார். இல்லையென்றால் கமல் சார் கஷ்டப்படுவார். அந்த சமயத்தில் என்ன செய்வதென்று எனக்கு ஒன்னுமே புரியவில்லை. அதன் பிறகு அந்த சீன் ரொம்ப நல்லா வந்தது” என்ற அவர் உடனே கீழ் அமைந்திருந்த கமலை பார்த்து, “கமல் சார் என்னை மன்னிச்சிக்குங்க. எல்லாத்துக்கும் காரணம் மணி சார் தான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கமல் சாருடன் ஒர்க் பண்ணின இந்த பயணம், நிறைய கத்துக்க முடிந்தது. பொதுவாக நான், புதுமுக நடிகர்களுடன் நடிக்க போனால், உங்களுடன் டான்ஸ் ஆட நடிக்க கொஞ்சம் பதட்டமா இருக்கு என சொல்வாங்க. சரி சும்மா நமக்காக சொல்றாங்க என நினைப்பேன். ஆனால் அவங்க என்ன சொன்னாங்க என்று கமல் சாருடன் நான் நடிக்கும் போதுதான் புரிந்தது. ஆனால் கமல் சார், நொம்ப தைரியம் கொடுத்து தன்னம்பிக்கை அளித்தார். அதுமட்டுமில்லை அவர் கூட சரிசமமா நடிக்கக் கூடிய வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார். அதை என்னைக்கும் மறக்க மாட்டேன். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையடுத்து பேசிய அவர்,“இந்த படத்தில் இனிமே நான் தான் ரங்கராய சக்திவேல்-னு ஒரு டயலாக் இருக்கு. அதை பார்த்த பலரும் கமல் சார் இடத்தை சிம்பு தான் பிடிக்க போறார், அதுக்காகத்தான் கமல் சிம்புவுக்கு இடம் கொடுத்திருக்கார் என சொல்றாங்க. அவங்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, தேவர் மகன் படத்தில் சிவாஜியுடன் கமல் நடித்ததால், சிவாஜி இடத்தில் கமல் உட்கார்ந்துவிட்டார் என்று அர்த்தம் கிடையாது. சிவாஜி சார் மிகப்பெரிய லெஜெண்ட். அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. அதே மாதிரி விதவிதமான கேரக்டர்களில் நடித்து கடுமையாக உழைத்து ஒரு இடத்திற்கு வந்தவர் கமல் சார். யாருடைய இடமும் யாருக்கும் ஈஸியா கிடைக்காது. அதுக்காக உழைக்கவேண்டும். நான் பேசிய டயலாக்கை எப்படி பார்க்கிறேன் என்றால், கமல் சார் ஒரு இண்டர்வியூவ்ல சொல்லியிருப்பா. என் தோள் மீது நில்லுங்க, நான் உங்களை தூக்கி விடுகிறேன் என்று. அதனால் கமல் சாரை நான் ஒரு ஏணி படியாகத்தான் பார்க்கிறேன். அவரை மிதிச்சு போகவில்லை, மதிச்சு தான் போகிறோம். அடுத்த தலைமுறையினர் வர வேண்டும் என்ற பெருந்தன்மை யாருக்கும் வராது. அவரிடம் நிறைய கத்துக்க வேண்டும். எல்லாத்துக்கும் நன்றி கமல் சார். அவர் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு நான் கண்டிப்பாக உழைத்து பெயரை காப்பாற்றுவேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)