
குழந்தை நட்சத்திரமாகவே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பிரபலமடைந்திருந்த சிம்பு, வளர்ந்த பிறகு ஒரு சிறந்த டான்சராக அறியப்பட்டார். 'சொன்னால்தான் காதலா', ‘மோனிஷா என் மோனலிசா’ படங்களில் இவர் ஆடிய டான்ஸ், ரசிகர்களை கவர்ந்தது. இதே போல நடிகர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் இவர் ஆடிய ஆட்டமும், 'சிலம்பரசன் நல்லா டான்ஸ் ஆடுகிறார்' என்று பேசப்பட்டது. படிப்படியாக கதாநாயகனாக உருவாக்கப்பட்டு தன்னுடைய அப்பா டி.ஆர் இயக்கத்தில் ‘காதல் அழிவதில்லை’ படத்தில் லான்ச் செய்யப்பட்டார் சிம்பு. அன்றில் இருந்து இன்றுவரை வெற்றிகளையும் தோல்விகளையும் பெற்றுள்ளார் இவர். சிம்புவின் வாழ்வில் மிக முக்கிய திருப்பங்களாக அமைந்த, மிக முக்கிய தருணங்களில் வெளிவந்த படங்கள் இவை...
காதல் அழிவதில்லை
பொதுவாக டி.ஆர், பெரிய நட்சத்திரங்களுடன் தன்னம்பிக்கையோடு மோதுவதில் புகழ்பெற்றவர். அந்த வகையில்தான் ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தை சூப்பர் ஸ்டாரின் ‘படையப்பா’வுடன் வெளியிட்டு போட்டிபோட்டார். இந்தப் படம் தோல்வி என்பது வேறு விஷயம். ஆனால் ரஜினியுடன் போட்டிபோடுவது அதிலும் அக்கால கட்டத்தில் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. ரஜினி படம் வெளி வருகிறது என்றாலே ஒரு மாதம் கழித்துதான் மற்ற படங்களை வெளியிடுவார்கள். அதுபோல தன்னுடைய மகனான சிம்புவை அறிமுகம் செய்யும் படத்தையுமே பெரிய போட்டிக்கிடையில்தான் வெளியிட்டார் டி.ஆர். 'காதல் அழிவதில்லை' வெளியான அன்றுதான் விஜய் நடித்த ‘பகவதி’, அஜித்துடைய ‘வில்லன்’, விஜயகாந்துடைய ‘ரமணா’ படங்கள் தீபாவளி ரிலீசாக வெளியானது. ஆனால், இது வெற்றியும் பெறவில்லை. இந்தப் படத்தின் மூலம்தான் சிம்பு முழுமையான ஹீரோவாக அறிமுகமாகினார் என்னும் முக்கியத்துவத்தை 'காதல் அழிவதில்லை' பெறுகிறது. இந்தப் படத்தில் 'வக்கீல் தாதா'வாக டி.ஆர். கலக்கியது கூடுதல் ஸ்பெஷல்.
மன்மதன்
'காதல் அழிவதில்லை' படத்தை தொடர்ந்து தம், குத்து என இரண்டு படங்கள் கமர்ஷியலாக சிம்புவை கொஞ்சம் கொண்டு சேர்த்தன. ஆனாலும் முழுமையாக ஒரு மாஸ் ஹீரோவாகவோ, குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கக் கூடிய படம் என்றோ ஒரு பெரிய வெற்றியை பெறாமல் இருந்தார். இதையடுத்து அலை, கோவில் என வந்த படங்கள் அனைத்தும் பெரிய வெற்றி பெறாத முயற்சிகளாகவே இருந்தன. 'அலை' படத்தை இயக்கியவர் 'யாவரும் நலம்', '24' போன்ற படங்களை இயக்கிய விக்ரம் குமார். 'கோவில்' படத்தை இயக்கியவர் பல வெற்றிப்படங்களை எடுத்த ஹரி. இதுபோன்ற இயக்குனர்களுடன் நடித்தும் சிம்புவுக்கு எதுவும் வொர்க்கவுட்டாகவில்லை. விமர்சகர்களும் 'டான்ஸ் மட்டும் ஆடினால் போதுமா?' என்று கேட்டனர். சிம்பு ஒரு நல்ல நடிகர் என்ற பெயர் எடுக்கவில்லை. 'விரல்வித்தை நடிகர்' என்பதே அவரைக் கிண்டலாகக் குறிப்பிடும் வார்த்தையாக இருந்தது. மற்றொரு பக்கம் 'காதல் கொண்டேன்' படத்தில் நடித்து ஹிட் கொடுத்ததன் மூலம் தனுஷ் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அலை ஒன்றை உருவாக்கியிருந்தார். இது கண்டிப்பாக தனுஷுக்கு முன்பே இளம் நடிகராக திரையுலகுக்கு அறிமுகமான சிம்புவுக்கு பிரஷராக இருந்தது. இவை அனைத்தையும் தாண்டி வெளிவந்த படம்தான் ‘மன்மதன்’. 'மன்மதன்' படம் முதலில் வெளியானபோது, இயக்குனர் ஏ.ஜே. முருகன், சிம்புவின் கதை, திரைக்கதை என்று மட்டும்தான் சொல்லப்பட்டது. படம் வேற லெவலில் ஹிட் அடித்து படத்தின் 225வது நாள் விளம்பரத்தில் 'இயக்கம் மேற்பார்வை - சிம்பு' என்று பெரிதாகவும் இயக்குனர் ஏ.ஜே.முருகன் என்பது சிறிதாகவும் போடப்பட்டது. இந்தப் பஞ்சாயத்து தற்போதுவரை ஓடிக்கொண்டிருந்தாலும் 'மன்மதன்' படம் சிம்புவுக்குப் பல பரிமாணங்களிலும் வெற்றியாக அமைந்த படம். தன்னுடைய அப்பாவை போன்றே பல கலைகள் தனக்கும் தெரியும் என்று சிம்பு வெளியுலகத்திற்கு காட்டியது இந்தப் படத்தின் வெற்றியின் மூலம்தான். அதேபோல சிம்புவுக்கும் யுவனுக்குமான காம்பினேஷன் இந்த படத்திலிருந்துதான் தொடங்கியது. இதனையடுத்து சிம்புவும் யுவனும் சேர்ந்தாலே பாடல்கள் வெற்றி என்று எதிர்பார்க்கப்பட்டது. மன்மதனும் ஒரு தீபாவளி அன்று அஜித்தின் அட்டகாசம் படத்துடன் வெளியானது. பின்னர் சில வருடங்கள் சிம்பு தன்னை அஜித் ரசிகனாகக் காட்டிக்கொண்டதன் ஆரம்பமாக மன்மதன் இருந்தது.
வல்லவன்
மன்மதன் வெற்றி உற்சாகத்துடன் உருவான படம்தான் வல்லவன். இந்த முறை வேறு இயக்குனர்களை வைத்து படம் எடுக்காமல், தானே இயக்குனராக அவதாரம் எடுத்தார் சிம்பு. மிகச் சிறிய வயதில் இயக்குனரான பெருமையையும் பெருமையுடன் 'மன்மதன்' வெற்றி தந்த நம்பிக்கையும் சேர இந்தப் படத்தில் ஓவர்ஃப்லோவாக மாஸ், ரொமான்ஸை சேர்த்தார். காதல் தோல்வியாளர்களின் ஐகான் சிம்பு என்கிற இமேஜை மீண்டும் இந்தப் படத்தின் மூலம் உருவாக்கினார். மேலும், ரஜினி படத்தின் எலமென்ட்ஸ் என்று சொல்லப்படும் பெண் வில்லி, அடிக்கடி பெண்ணுக்கு அட்வைஸ், பஞ்ச் டயலாக் ஆகியவற்றையும் முதல் பாதியில் கமல்ஹாசனை இமிடேட் செய்யும் 'காதல் வந்துடுச்சு' நடிப்பையும் சேர்த்து ரஜினி - கமல் இருவரையும் பிரதிபலிப்பது போன்று இந்தப் படத்தை உருவாக்கினார். ஆனால், படத்தில் எல்லாமே ஓவராக இருந்ததால் ரிசல்ட் கொஞ்சம் சொதப்பல்தான். இந்தப் படமும் தீபாவளிக்கு அஜித்தின் ‘வரலாறு’, விஜயகாந்தின் ‘தர்மபுரி’ ஆகிய படங்களுடன் போட்டிபோட்டது. ஆனால், இந்தமுறை சிம்புவின் தன்னம்பிக்கைக்கு மட்டும்தான் பாராட்டுக்கள் கிடைத்தது படத்திற்கு அல்ல.
சிலம்பாட்டம்
'மன்மதன்' எவ்வாறு சிம்புவுக்கு நகர்புறத்தில் ரசிகர்களை சம்பாதித்து கொடுத்ததோ, அதைப்போல கிராமப்புறங்களில் அவருக்கு ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்த படம்தான் 'சிலம்பாட்டம்'. தமிழ் சினிமாவில் ஒரு வழக்கம் உண்டு, மாஸ் ஹீரோ என்னதான் பெரிய ஹிட்டுகள் தொடர்ந்து கொடுத்தாலும், அவர் ஒரு படத்திலாவது போலீஸாகவும் ஒரு படத்திலாவது கிராமப்புற கதைகளத்தில் நடித்திருக்க வேண்டும். அப்போதுதான் மாஸ் ஹீரோவுக்கான தேர்வில் அந்த நடிகர் முழுமையாக பாஸ் ஆவார். அந்த வெற்றியை சிம்புவுக்குக் கொடுத்தது 'சிலம்பாட்டம்'தான். ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிம்பு, அஜித் ரெஃபரன்ஸுகளை அள்ளித்தெளித்திருப்பார். இரண்டாம் பாதியில் பில்லா அஜித் போன்று அவதாரம் எடுத்து 'குட்டி தல'யாக வளம் வந்தார். அதேபோல இந்தப் படத்தில் சிம்புவுக்காக வாலி எழுதிய 'தமிழ் என்ற நான் ஒரு தமிழண்டா', 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' என இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் வரிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றவை. சிம்பு-யுவன் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் செம ஹிட்டடிக்க விமர்சகர்கள் [பார்வையில் மிகச் சுமாரான இந்தப் படம் வர்த்தக ரீதியாக வெற்றிப்படமானது.

விண்ணைத் தாண்டி வருவாயா
"உன் கண் வழியா என்னை யாரும் பாக்கலை போல..." - இது திரிஷா VTVயில் பேசும் வசனம். இந்த வசனம் போலவே கௌதம் வாசுதேவ் மேனன் கண்கள் வழியாக சிம்பு வேறு லெவலில் தோன்றியிருக்கிறார். முதலில் இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கிறார்கள், அது முழுக்க முழுக்க காதல் படம் என்று சொல்லும்போது எல்லோரும் ஆச்சரியமாகவே பார்த்தார்கள். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்த்தார். பாடல்கள் காதல் பரவசத்தை தந்தது. விரல் வித்தை இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை... அதுவரை அதுபோன்ற ஒரு சிம்புவை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள், எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள். அப்படி ஒரு அமைதியான நடிப்பில் ஆச்சரியத்தை அளித்தார். நடிப்பில் உண்மையிலேயே சிம்பு சிறந்தவர் என்பதை முதன் முதலாக பேசி நிரூபிக்காமல், நடித்து நிரூபித்தார் சிம்பு. ராம் - ஜானு காலம் வரை கார்த்திக் - ஜெஸ்ஸி ஜோடி மறக்க முடியாததாக இருந்தது. சிம்புவுடன் பணியாற்றிய இயக்குனர்கள் பெரும்பாலும் அவரைப் பாராட்டிப் பேட்டிகளில் பேசியதில்லை. ஆனால், கௌதம் மேனன் சிம்பு குறித்து மிகப் பெருமிதமாக 'ஒன் டேக் ஆர்ட்டிஸ்ட்', 'லேட்டா வந்தாலும் ஃபாஸ்டா முடித்துக் கொடுப்பார்' என்றெல்லாம் பலமுறை கூறியுள்ளார். லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்த சிம்புவுக்கு இந்தப் படத்தில் யங் சூப்பர் ஸ்டார் ப்ரொமோஷன் கிடைத்தது.
அச்சம் என்பது மடமையடா
'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து சிம்பு-ஜிவிஎம்-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் என்றவுடன் ரசிகர்கள் உற்சாகமாகினார்கள். ஆனால், இந்தப் படம் எடுக்கத் தொடங்கி பல ஆண்டுகள் கழித்தே வெளியானது. சிம்புவை முந்தைய படத்தில் பாராட்டிய ஜிவிஎம், இந்தப் படத்தின் காலகட்டத்தில் 'அவர் படப்பிடிப்புக்கு சீக்கிரமாக வந்தால் படத்தை முடித்துவிடலாம்' என்றார். பின்னர், இது சர்ச்சையை உருவாக்கியது, இந்த சர்ச்சைகளைத்தாண்டி மிகப்பெரிய சர்ச்சை என்றால் அது பீப் பாடல்தான். அந்தப் பாடலை சிம்பு பாடி அது தவறுதலாக லீக்காக, மாதர் சங்கங்கள் அதை வன்மையாக கண்டித்தன. அந்த கெட்ட பெயரை சற்றே திசைதிருப்ப இந்தப் படத்தில் உருவாக்கப்பட்ட தள்ளிப்போகாதே பாடல் அச்சமயத்தில் உடனடியாக வெளியிடப்பட்டு, சிம்புவின் இமேஜை காப்பாற்றியது. சிறந்த பாடல்கள், கிளாஸான தோற்றம், மறக்க முடியாத காதல் காட்சிகள் என கௌதம் மேனன் சிம்புவுக்குத் தந்த இரண்டு படங்களுமே அவருக்கு முக்கியமானவை.
செக்கச் சிவந்த வானம்
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் மிகப்பெரிய தோல்வி... படம் உண்டாக்கிய விமர்சனங்கள்... ஷூட்டிங்குக்கே வராமல் என்னை ஏமாற்றிவிட்டார் என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு... தயாரிப்பாளர் சங்கம் ரெட்கார்ட் போடும் அபாயம்... என இத்தனை சர்ச்சைகள் நிறைந்த எதிர்மறை சூழலில் சிம்புவுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் நம்பிக்கையாக அமைந்தது 'செக்கச் சிவந்த வானம்' பட அறிவிப்பு. அதுவும் அந்த சூழ்நிலையில் மணிரத்னம் சிம்புவை வைத்து ஒரு மல்டி ஸ்டாரர் திரைப்படம் எடுக்கத் துணிந்தது, சினிமா ரசிகர்களுக்கு பெறும் ஆச்சரியம்தான். சமூக ஊடகங்களில் இதைக் கிண்டல் செய்து எக்கச்சக்க மீம்கள் வந்தன. அத்தனை கணிப்பையும் முறியடித்து அரவிந்த்சுவாமி, அருண்விஜய், விஜய் சேதுபதியுடன் STR நடித்து வெற்றிகரமாக வெளிவந்தது செக்கச் சிவந்த வானம். மணிரத்னத்துக்கும் இது பெரிய 'கம் பேக்' படம்தான். அந்த ஆண்டின் பெரிய வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது CCV. இந்தப் படத்தில் சிம்பு பேசும் ஒரு டயலாக்தான் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. அதையே அடுத்த படத்தின் டைட்டிலாக வைத்து, இப்போது படம் வெளியாக இருக்கிறது. சிம்பு, எப்போதுமே வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற ஆட்டிட்யூட் உள்ளவர். ஃபிப்ரவரி ஒன்றாம் தேதி வருகிறார், அப்போது ராஜாவா வருகிறாரா இல்லையா என்பதை பார்ப்போம்!