
தெலுங்கானாவில் ஆண்டுதோறும் நடக்கும் ஹைதராபாத் இலக்கிய விழா இந்தாண்டும் நடந்து முடிந்துள்ளது. இந்த விழா அனைத்து வடிவங்களிலும் இருக்கும் படைப்பாற்றலைக் கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள், வெளியீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். மேலும் இலக்கிய வகுப்புகள், மேடைப் பேச்சுகள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி நாள் விழாவான கடந்த 26ஆம் தேதி இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் விதமான விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் ஒரு பகுதியாக நடந்த உரையாடலில் பாடகி, எழுத்தாளர் வித்யா ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது சினிமா குறித்து பேசிய அவர்கள் அதில் இருக்கும் ஆணாதிக்கம், நச்சுத்தன்மை போன்ற விஷயங்கள் குறித்து பேசினர்.
அப்போது சித்தார்த் பேசுகையில் ஸ்டீரியோடைப்களை நிலைநிறுத்தும் கதாபாத்திரங்களைத் தான் தவிர்த்து வந்ததாக கூறினார். அவர் பேசியதாவது, “பெண்களை அறைவது, ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடுவது, அவர்களின் இடுப்பை கிள்ளுவது அல்லது ஒரு பெண் என்ன செய்ய வேண்டும், அவர் எங்கு செல்ல வேண்டும் என்று சொல்லும் ஸ்கிரிப்டுகள் எனக்கு வந்தது. அவற்றை நான் முற்றிலுமாக நிராகரித்துவிட்டேன். ஒரு வேளை அந்த ஸ்கிரிப்டுகளுக்கு நான் ஒப்புக்கொண்டிருந்தால் இன்று மிகப்பெரிய ஸ்டாராக இருந்திருப்பேன். ஆனால் எனக்கு பிடித்ததை செய்து வருகிறேன் அவ்வளவுதான்.
நான் பெண்களை மதிக்கிறேன், பெற்றோரிடம் அன்பாக நடந்து கொள்கிறேன், குழந்தைகளுடன் நன்றாக பழகுகிறேன், அழகாக இருக்கிறேன் என மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். அவர்களின் குழந்தைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எனது படங்களைப் பார்க்கலாம். இது மிகவும் மகிழ்ச்சிகரமான உணர்வு. இந்த உணர்வு கோடிக்கணக்கில் வரக்கூடிய பணத்துடன் அளவிடக்கூடிய ஒன்றல்ல. என்னைச் சுற்றியுள்ள அனைவரும் ஆக்ரோஷமாகவும், ஆணவமாகவும் இருக்க முயல்கின்றனர். ஆண்கள் வலியை உணர மாட்டார்கள் என நினைக்கின்றனர். ஆனால் நான் திரையில் அழுவதை விரும்புகிறேன். அதனால் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்றார். பாடகி மற்றும் எழுத்தாளர் வித்யா ராவ், சித்தார்த்தின் மனைவி நடிகை அதிதி ராவ்வின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.