Sibiraj

சினிமாவில் நடிக்க ஆட்கள் தேவை என்ற அறிவிப்புடன் பெண்களைக் குறிவைத்துப் பரப்பப்படும் விளம்பரங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. பரிட்சயமிக்க நடிகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சில மர்ம நபர்கள் இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் விஷ்ணு விஷாலின் படத்தில் நடிக்க நடிகைகள் தேவை என்று ஒரு விளம்பரம் சமூக வலைதளங்களில் உலா வந்தது. ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலின் கவனத்திற்கு அது செல்ல, அது போலியானது என்று அவர் விளக்கமளித்தார். மேலும், இதுபோன்ற நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தினார்.

Advertisment

இந்த நிலையில், இந்த மர்ம கும்பல் தற்போது நடிகர் சிபி சத்யராஜின் பெயரைப் பயன்படுத்தி பெண்களைக் குறிவைத்துள்ளது. சிபி சத்யராஜ் படத்தில் நடிக்க ஆட்கள் தேவை எனக் குறிப்பிட்டுள்ள அந்த கும்பல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப வயது வித்தியாசத்தையும் குறிப்பிட்டுள்ளது. இந்த விளம்பரம் சிபி சத்யராஜின் கவனத்திற்கு வர, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது என் கவனத்திற்கு வந்தது. இது போலியானது. இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. இதற்கு இரையாகிவிட வேண்டாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.