மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தேர்தல் சமீபத்தில் நடந்தது. கடந்த ஆண்டு பாலியல் விவகாரம் தொடர்பாக வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் தலைவர் உட்பட 17 நிர்வாகிகள் தங்களது பதவியை கூண்டோடு ராஜினாமா செய்த நிலையில் கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இதில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக வெற்றி பெற்றார். இதன் மூலம் சங்கத்தில் முதல் பெண் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் ஸ்வேதா மேனன் படப்பிடிப்பில் பெண்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “நான் கர்ப்பமாக இருந்த போது நான்கு படங்களில் நடித்தேன். ஆனால் அதிகாலை படப்பிடிப்புகள் எனக்கு சௌகரியமாக இருக்காது. அதை என் இயக்குநர்களிடம் சொன்ன போது அவர்கள் புரிந்து கொண்டார்கள். பெரும்பாலான பிரச்சினைகள் பேச்சுவார்த்தை அடிப்படையில் தீர்க்க முடியும், ஆனால் அதை மக்கள் பெரும்பாலும் செய்வதில்லை.
அம்மா அமைப்பில் முதல் பெண் துணைத் தலைவராக நான் இருந்த போது, தைரியமாக உங்களது பிரச்சனைகளை வந்து சொல்லுங்கள் என பெண்களிடம் கேட்டு கொண்டேன். ஆனால் யாருமே முன்வரவில்லை. அதை நினைத்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். இருப்பினும் அவர்களை நான் குறை கூற மாட்டேன். ஏனென்றால் எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் தனிப்பட்ட பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். வாழ்க்கையை நினைத்து கவலைப்படுகிறார்கள். அதனால் பெண்களின் பிரச்சனைகளை மெதுவாக வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்” என்றார்.