மலையாள நடிகர் சங்க அமைப்பு ‘அம்மா’(AMMA - Association of Malayalam Movie Artist) என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் மோகன்லால் தலைவராக வெற்றி பெற்று வழிநடத்தி வந்தார். ஆனால் அவர் கடந்த ஆண்டு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

Advertisment

கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு முன்னணி நடிகைக்கு ஏற்பட்ட பாலியல் சம்பவம் தொடர்பாக பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஹேமா கமிட்டி அறிக்கை அமைக்கப்பட்டது. அந்த அறிக்கையின் சில பக்கங்கள் கடந்த ஆண்டு வெளியாக அதில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் சம்பவங்கள் குறித்து பொதுவெளியில் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த, தொடர் பாலியல் புகார்கள் காரணமாக ‘அம்மா’ அமைப்பின் தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். சங்கமும் கலைக்கப்பட்டது. இதனால் சங்கத்தின் புது தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

தேர்தலில் தலைவர் பதவிக்கு பிரபல நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவு பெருகியது. இவர் ஜெயிக்கும் பட்சத்தில் இவர் தான் முதல் பெண் தலைவராவார். ஆனால் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் நேரத்தில் இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. நிதி ஆதாயத்திற்காக ஆபாச படங்களில் நடித்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் ஸ்வேதா மேனன் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. 

இதனைத் தொடர்ந்து நேற்று(15.08.2025) கொச்சியில் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. ராஜினாமாவுக்குப் பிறகு நடக்கும் தேர்தல், தலைவர் பதவிக்கு பெண் ஜெயிக்கும் வாய்ப்பு, கடைசி நேரத்தில் அவர் மீது புகார் என பரபரப்புடன் இத்தேர்தல் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 1 மணிக்கு நிறைவுபெற்றது. மொத்தம் 506 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் 298 உறுப்பினர்கள் தான் வாக்களித்தனர். பிரபல நடிகர்களான மம்முட்டி, ஃபஹத் பாசில், நிவின் பாலி, பிருத்விராஜ், ஆசிப் அலி உள்ளிட்ட பலர் இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 58 சதவீத வாக்குகளே பதிவானது.

Advertisment

வாக்குபதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தலைவராக ஸ்வேதா மேனன் வெற்றிபெற்றார். இதன் மூலம் சங்கத்தின் முதல் தலைவராகப் பொறுப்பேற்கிறார். துணைத் தலைவராக லட்சுமி பிரியாவும், பொதுச் செயலாளராக குக்கு பரமேஸ்வரனும் இணைச் செயலாளராக அன்சிபா ஹாசனும் பொருளாளராக உன்னி சிவபால் வென்றார்.