2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திமுக-வோடு ஏற்பட்ட உடன்படிக்கையில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.
புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஏற்கனவே போடப்பட்ட உடன்படிக்கையின் படி கமல்ஹாசன் போட்டியிட்டு, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளது தொடர்பாக ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் இன்று(25.07.2025) மாநிலங்களவையில் பதவி ஏற்று கொண்டார். புதிதாக பதவி ஏற்ற கமல்ஹாசனுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், “மை டியரஸ்ட் அப்பா. இன்றைய நாள் துணிச்சலான புதிய உலகத்தை நோக்கிய உங்களது பயணம் குறிக்கப்படுகிறது. உங்களின் தனித்துவமான அந்த குரலில் நீங்கள் பதவிப் பிராமணம் ஏற்றதை பார்த்தேன். அப்போது, உங்களின் கம்பீரமான குரல் அரங்கத்தில் எதிரொலித்த தருணத்தை நான் என்றென்றும் மனதில் வைத்து கொள்வேன்.
எப்போதும் போல, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும், நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் அடையவும் நான் வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். கமலுடன் இன்று ஸ்ருதிஹாசனும் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.