தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் இப்போது ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படங்களைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார்.
இதில் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ரஜினியுடன் முதல் முறையாக நடித்துள்ளார். இவர்களை தவிர்த்து தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், சத்யராஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில் ‘சிக்குடு வைப்’ பாடலை தொடர்ந்து ‘மோனிகா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ஸ்ருதிஹாசன், ரஜினியுடன் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “என் அப்பாவும் ரஜினி சாரும் தமிழ் சினிமாவின் தூண்கள் மற்றும் முகங்களை போன்றவர்கள். ரஜினியை நான் எப்போதும் மக்கள் பார்வையில் இருந்து தான் பார்த்திருக்கிறேன். ஆனால் மக்கள், அவருடன் அருகிலே வளர்ந்தது போல் நினைத்துக் கொள்கிறார்கள். நான் அவரை சூப்பர் ஸ்டாராகவும் அப்பாவின் மூலமாகவும் பார்த்திருக்கிறேன். ஆனால் படப்பிடிப்பில் அவரை பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அவரிடம் நிறையத் தனித்துவமான குணாதிசயங்கள் இருக்கும். புத்திசாலியாகவும் இருப்பார், அன்பானவராகவும் இருப்பார். அதே போல் பேசுவதற்கு எளிமையாகவும் இருப்பார். படப்பிடிப்பு தளத்தில் நல்ல ஆற்றலோடு இருப்பார். அதனால் அவருடன் வேலை பார்க்கும் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்” என்றார்.