
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் இப்போது ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படங்களைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். இதில் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஸ்ருதி ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கூலி படம் டப்பிங் ஸ்டேஜில் இருக்கிறது. டப்பிங் பேசும்போது படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மக்களும் நல்ல என்ஜாய் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன். தக் லைஃப் படத்தில் விண்வெளி நாயகன் பாடலை பாடியது ரொம்ப சந்தோஷம். நான் ரஹ்மான் சாரின் மிகப் பெரிய ரசிகை. அவர் பாட கூப்பிட்டது ரொம்ப மகிழ்ச்சி. அதோடு மணி சார், அப்பா படத்துக்கு பாடியது கூடுதல் மகிழ்ச்சி. இதை கௌரவமாகவும் பார்க்கிறேன்.
விண்வெளி நாயகன் பட்டம் குறித்து அப்பா தான் முடிவெடுக்க வேண்டும். அது குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. எனக்கு அவர் எப்போதுமே அப்பாதான். அவருடன் நான் நடிப்பதற்கு எப்போதுமே ரெடி தான். அவர் தான் பிஸியாக இருக்கிறார். அவர் கூப்பிட்டால் போய்விடுவேன்” என்றார்.