shriya saran speech at Kabzaa Press Meet

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. கடந்த 2017ல் சிம்பு நடிப்பில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்ததற்குப் பிறகு தமிழில் எந்தப் படமும் நடிக்கவில்லை. தொடர்ந்து மற்ற மொழிப் படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் 'த்ரிஷியம் 2' படத்திற்குப் பிறகு தற்போது 'கப்ஸா' என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 17 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது. அதனால் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

Advertisment

அதன் ஒரு பகுதியாக கப்ஸா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு ஸ்ரேயாவும் கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்ரேயா, அப்போது,தமிழில் படங்கள் நடிக்காதது குறித்து பதிலளித்துள்ளார். "நீங்கள் என் மீது அன்பு செலுத்துவதை நிறுத்திவிட்டீர்கள். அதனால் தான் திரும்ப வரவில்லை. அதனால் அன்பை திருப்பி கொடுங்கள் வருகிறேன்" என ஜாலியாக பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், "சில சமயங்களில் படங்கள் எதிர்பார்த்த அளவு போகாமல் இருந்திருக்கலாம். அல்லது எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றி பெற்றிருக்கலாம். எதுவாக இருந்தாலும் ஆசீர்வாதம் தான். கண்டிப்பாக மீண்டும் தமிழில் நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். அதனால் சுவாரசியமான கதைகளை எதிர்பார்க்கிறேன்" என்றார்.

Advertisment

ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, "அவருடன் நடிக்கும் வாய்ப்பை யார் மறுப்பார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் மதிப்பு கொடுப்பார். அன்போடும் பழகுவார். அந்த அன்பை பெறுவதற்காக மீண்டும் அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன்" என்றார் . திருமணத்திற்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளுக்கு நடிகைகள் அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்.நீங்கள் கதாநாயகன் படத்தில் நடித்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, "யார் படமாக இருந்தாலும் சரிஎந்த மொழி படமாக இருந்தாலும் சரி கதை தான் முக்கியம்" என்றார்.