பாலிவுட் நடிகை திஷா பதானி கடைசியாக தமிழில் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் வெளியான கங்குவா படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் தலா ஒரு படம் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

Advertisment

இந்த நிலையில் உத்தர பிரதேசம், பரேலி மாவட்டத்தில் உள்ள திஷா பதானி வீட்டில் துப்பாக்கு சூடு நடந்துள்ளது. சரியாக நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டின் வெளியே இரண்டு நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அப்போது வீட்டினுள் திஷா பதானியின் குடும்பத்தினர் இருந்துள்ளனர். நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த போது திஷா பதானி மும்பையில் இருந்துள்ளார். சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு திஷா பதானி குடும்பத்தினர் தகவல் கொடுக்க, உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்த காவல் அதிகாரிகள் இரண்டு வெற்று தோட்டாக்களை கைப்பற்றினர். பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து குற்றப்பிரிவுக்கு வழக்கை மாற்றியுள்ளனர். 

இந்த சம்பவத்துக்கு கோல்டி பிரார் கேங்ஸ்டர் கும்பல், பொறுப்பேற்றுள்ளது. அவர்களது மத பிரமுகர்ளான பிரேமானந்த் மகாராஜ் மற்றும் அனிருத்தாச்சார்யா மகாராஜ் ஆகியோரைப் பற்றி திஷா பதானி மற்றும் அவரது சகோதரி இருவரும் இழிவுபடுத்தி பேசியதற்காக இந்த துப்பாக்கி சூடு எனத் தெரிவித்துள்ளனர். இதனை அந்தகேங்கில் இருக்கும் ரோஹித் கோதரா, என்பவர் அவரது ஃபேஸ்புக் பதிவில், குறிப்பிட்டுள்ளார். மேலும் “எங்கள் மதத்தை பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். தர்மமும் சமூகமும் எங்களுக்கு ஒன்று. அவற்றை பாதுகாப்பது எங்களின் முதன்மையான கடமை. இந்த சம்பவம் வெறும் டிரெய்லர் மட்டுமே. இன்னொரு முறை யாராவது எங்கள் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். பேசியவர்கள் தப்பிக்க முடியாது” என எச்சரித்துள்ளனர். அதோடு பல்வேறு குற்றப் பின்னணியில் இருக்கும் கேங்ஸ்டர் கும்பலை ஹேஷ்டேக்கில் இணைத்து மத உணர்வுகளுக்கு ஏற்படும் எந்தவொரு அவமானத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என வலியுறுத்தி பதிவிட்டிருந்தார். 

சம்பவத்தைத் தொடர்ந்து திஷா பதானி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சல்மான் கானுக்கு மானை வேட்டையாடியதாக மான்களை தெய்வமாக வழிபடும் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.