
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் அஜித் குமார், நடிகை சோபனா சந்திரகுமார் மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு அறிவிக்கப்பட்டது.
பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதற்கட்ட விழா கடந்த மாதம் 28ஆம் தேதி நடந்த நிலையில் பத்ம பூஷன் விருதுகளில் தமிழ்நாட்டை பொறுத்தவரை அஜித்குமார், ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் விருதினை பெற்று கொண்டார்.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட விழா இன்று வழக்கம் போல் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்தது. இதில் பத்ம பூஷனுக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான மீதமுள்ள இரண்டு நபர்களும் விருதுனை பெற்றுக் கொண்டனர். அதாவது நடிகையும் நடனக் கலைஞரான ஷோபனா ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் பெற்று கொண்டார். மேலும் தொழிலதிபர் நல்லி குப்புசாமியும் ஜனாதிபதி கையால் விருதினை பெற்றுக் கொண்டார்.