/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/210_28.jpg)
மலையாளத்தில் மோகன் லால், ஷோபனா நடிப்பில் ஃபாசில் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘மணிச்சித்திரத்தாழ்’. இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமேக்கானது. முதலில் கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடிப்பில் ‘அப்தமித்ரா’ என்ற தலைப்பில் 2004ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பின்பு தமிழில் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடிப்பில் ‘சந்திரமுகி’ என்ற தலைப்பில் 2005ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு அதே வருடத்தில் பெங்காலியில் ஸ்வபன் சாஹா இயக்கத்தில் ப்ரோசென்ஜித் சாட்டர்ஜி, அனு செளத்ரி நடிப்பில் ‘ராஜ்மஹோல்’ என்ற தலைப்பில் வெளியானது. அதன் பின்பு இந்தியில்பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் நடிப்பில் ‘பூல் புலையா’ (Bhool Bhulaiya) என்ற தலைப்பில் 2007ஆம் ஆண்டு வெளியானது.
இந்நிலையில் ‘மணிச்சித்திரத்தாழ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி ரீ ரிலீஸாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் சிறப்பு திரையிடல் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் படத்தில் நடித்து தேசிய விருது வாங்கிய ஷோபனா கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “31 வருடங்களுக்கு பின்பு மீண்டும் இப்படத்தை டால்பி அட்மோஸ் சவுண்டில், அழகான கலர் டோனில் படத்தை வெளியிட உள்ளனர். இப்படத்தில் நடித்தது எனக்கு வித்தியாசமான அனுபவம். நிறைய பேர் இப்படத்தை 100 நாட்கள் பார்த்துள்ளதாக என்னிடம் கூறினர். ஆனால் இப்படத்தை 3வது முறையாக திரையரங்கில் பார்த்துள்ளேன், எனக்கு இது அற்புதமான அனுபவம். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் மாஸ்டர் டெக்னீசியன்ஸ். அதிலும் இயக்குநர் ஃபாசில் ஒரு ஜீனியஸ். இந்த காலத்தில் இப்படத்தை பார்த்தாலும் பழைய படம் என்று தெரியாத அளவிற்கு இருக்கும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/209_18.jpg)
கேரளாவில் இப்போது கூட இந்தபடத்திலுள்ள டயாலாக்கை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்” என்றார். அப்போது அவரிடம் இப்படம் இதுவரை ரீமேக் செய்ததில் கங்காவாக உங்களுக்கு பிடித்தது ஜோதிகாவா? இல்லை சௌந்தர்யாவா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “துரதிஷ்டவசமாக நான் ஜோதிகா நடித்த ‘சந்திரமுகி’படத்தையும் பார்க்கவில்லை, சௌந்தர்யா நடித்ததையும் பார்க்கவில்லை. ஆனால் நான் இந்தி ரீமேக்கான ‘பூல் புலையா’ படத்தை பார்த்துள்ளேன். அந்தப் படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன் ‘மணிச்சித்திரத்தாழ்’ படத்திலும் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார். அதில் எல்லோரும் திருப்தியளிக்கும் வகையில் நடித்துள்ளனர். இப்படத்தை ரீமேக் செய்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)