“வினோத் என்னை மீண்டும் சந்தித்தார்” - ‘விஜய் 69’ குறித்து சிவ ராஜ்குமார்

shivarajkumar about vijay 69

முழு நேர அரசியலுக்கு முன் விஜய்யின் கடைசி படமாக பார்க்கப்படும் விஜய்யின் 69வது படம், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது. அ.வினோத் இயக்கும் இப்படத்தை தெலுங்கு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாலிவுட் நடிகர் பாபி தியோல், மலையாள இளம் நடிகை மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் இப்படத்தில் இணைவார் என பேசப்பட்டது. சமீபத்திய பேட்டியில் அவர், “விஜய்யின் 69வது படத்தில் நடிக்க அழைத்தனர். அது ஒரு அழகான கதாபாத்திரம். ஆனால் என்னுடைய கால்ஷீட் சரியாக அமையுமா எனத் தெரியவில்லை. இந்தப் படம் விஜய்யின் கடைசி படம் என சொல்கிறார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் நடிப்பை விட்டு விலகக்கூடாது என நினைக்கிறேன். ஒரு நண்பராகவும் நலம் விரும்பியாகவும் சொல்கிறேன் விஜய் ஒரு அற்புதமான நடிகர் மற்றும் நல்ல மனிதர். அவரது லட்சியம் அற்புதமானது, அதை நான் மதிக்கிறேன். அவருடைய படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பேன் என்று நம்புகிறேன்” என கூறியிருந்தார்.

இதனால் அவர் இணைவதாக பேசப்பட்ட நிலையில் தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. மற்றொரு பேட்டியில் சிவ ராஜ்குமார் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். பிரபல ஆங்கில ஊடகத்தில் அவர் பேசியதாவது, “சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் வினோத் என்னை மீண்டும் சந்தித்தார். அப்போது விஜய் படத்தில் நான் நடிப்பது சாத்தியமில்லை என்றும் வேறொரு கதையுடன் பின்பு வருவதாகவும் சொன்னார். என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு இது ஒரு பிரச்சினை அல்ல” என்றார்.

actor vijay h.vinoth Thalapathy 69
இதையும் படியுங்கள்
Subscribe