shiva rajkumar about kamal language issue

மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன். கமலின் ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார் பங்கேற்றார்.

சிவராஜ்குமார் குறித்து மேடையில் பேசிய கமல், என் மகனாகவும் ரசிகனாகவும் சிவ ராஜ்குமார் வந்திருப்பதாக சொன்னார். பின்பு அவரது தந்தை ராஜ்குமார் குறித்து தனது நினைவுகளை குறிப்பிட்டு, சிவ ராஜ்குமாரை பார்த்து, “இவர் அந்த ஊரில் இருக்கும் என் குடும்பம். அதனால்தான் அவர் இங்கு இருக்கிறார். அதனால்தான் என் பேச்சை ஆரம்பிக்கும் போது, உயிரே, உறவே, தமிழே என ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்தது தான் உங்கள் பாஷையும். அதனால் நீங்களும் அதில் உட்படுவீர்கள்” என்றார். அதாவது தமிழில் இருந்து தான் கன்னடம் மொழி உருவானது என்று கமல் சொன்னது தற்போது கர்நாடகாவில் எதிர்ப்புகளை சம்பாதித்தது.

கன்னட மொழியை கமல் அவமதித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பா.ஜ.க. கர்நாடக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி, கன்னட சலுவளி வாட்டாள் பக்‌ஷா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட சில கன்னட அமைப்புகள் கமலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் போராட்டல் வெடிக்கும், அவரது படங்கள் எங்கு ஓடாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதோடு பெங்களூருவில் தக் லைஃப் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்காக வாழ்த்தி வைத்திருந்த ரசிகர்களின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்து, கமல்ஹாசனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Advertisment

இவர்களை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் சித்தராமையா, கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு. பாவம் கமல்ஹாசனுக்கு அது தெரியாது என தனது கண்டனத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் பதிவு செய்திருந்தார். அதோடு கர்நாடக அமைச்சர் சிவராஜ், கமல் மன்னிபு கேட்க வில்லை என்றால் அவரது படங்கள் கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்படும் என்று எச்சரிந்தார். இந்த பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் கமல்ஹாசன் விளக்கமளித்திருந்த நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என சூசகமாக தெரிவித்திருந்தார். மேலும், அரசியல்வாதிகள் மொழிகளை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்றும் மொழியியல் அறிஞர்கள், வல்லுநர்கள் தான் இதற்கு சரியான பதில் சொல்வார்கள் என்றும் கூறியிருந்தார். அதோடு அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என தனது விளக்கத்தை கூறியிருந்தார். இருப்பினும் கர்நாடகாவில் எதிர்ப்பு குரல்கள் ஓய்ந்தபாடில்லை. கமல் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சிவ ராஜ்குமார் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “கமல் சார் எனக்கு வெறும் ஸ்டார் மட்டும் அல்ல. இன்ஸ்பிரேஷனும் கூட. எல்லாருக்கும் ஒரு நடிகரை பிடிக்கும். அந்த வகையில் எனக்கு கமல். எப்போதும் அவர்தான். ஆடியன்ஸுக்கு என்ன தேவையோ, அதை சரியாக அவர் புரிந்துகொள்கிறார். அதன்படியே தான் படங்களையும் கொடுத்து வருகிறார். அவர், தக் லைஃப் பட நிகழ்ச்சிக்கு என்னை விருந்தினராக அழைத்தது நம் அனைவருக்கும் பெருமை. அவர் சமீபத்தில் கூட கர்நாடகாவிற்கு வந்திருந்தார். அப்போது, அவரிடமே, அவர் கூறிய கருத்தில் முரண்பாடு இருப்பவர்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை. ஏன் அமைதியாக இருந்தார்கள் எனத் தெரியவில்லை.

கன்னடம் மொழி மீது இருக்கும் அன்பு யாராவது பேசினால் மட்டும் வெளிப்படுத்தக்கூடாது. அது எப்போதும் நம் மனதில் இருந்து வெளிப்பட வேண்டும். கன்னட மொழி மீதான நமது அர்ப்பணிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால், கன்னடத்திற்காக போராட, என் உயிரைக் கூட கொடுக்க தயாராக இருக்கிறேன். கேமராக்கள் முன் கன்னடத்தைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது போதாது. வார்த்தைகளை விட செயல்கள் முக்கியம். கன்னட சினிமாவுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? புது முகங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளீர்களா? கன்னடம் வளர வேண்டும் என்று நாம் உண்மையிலேயே விரும்பினால், அதற்குறிய எல்லா வழிகளையும் ஆதரிக்க வேண்டும். அது நமது கடமை. நான் சொல்வதை யாரும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். நான் சொல்வது சரியா இல்லையா என்பதற்கு ஒரு தெளிவான பதில் கிடைக்கும்.

Advertisment

இதற்கு மேல் கமல் கூறிய கருத்து குறித்து நான் பதில் சொல்லத் தேவையில்லை. அவர் ஏற்கனவே கன்னட சினிமாவுக்கு நிறைய பங்களித்துள்ளார். அவரது தீவிர ரசிகன் நான். நிறைய பேர் கேட்கலாம், ஏன் சொந்த அப்பாவை விட சிவராஜ்குமாருக்கு கமலை பிடித்திருக்கிறது என்று. அப்பா, எப்போதும் குடும்பத்திற்குள் வருவது. ஆனால் கமல் அதில் இருந்து வித்தியாசப்படுவார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் என்ன சொன்னார் என்பது அவருக்கு தெரியும்” என்றார்.