மலையாள நடிகை வின்சி அலோசியஸ் கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, “போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்” எனப் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், “நான் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவர் போதை பொருள் பயன்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டார். அவருடன் நடிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் படப்பிடிப்பில் எனது உடையில் சில சிக்கல் இருந்தது, அதை சரி செய்ய நான் சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த அந்த நடிகர் இதை சரி செய்ய நான் உதவுகிறேன் என சொல்லி என் கூடவே வருவதாக சொன்னார். இதனை அனைவரின் முன்பும் சொன்னதால் எனக்கு சங்கடமாகிவிட்டது.

பின்பு ஒரு காட்சியின் ரிஹர்சலின் போது அவரது வாயிலிருந்து வெள்ளை கலரில் ஒரு துளி டேபிலில் சிந்தியது. அதை பார்க்கையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தொந்தரவாக மாறியது” என்றார். இதனால் யார் அந்த நடிகர் என்ற கேள்வி எழுந்தது. பின்பு இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாற நடிகை வின்சி, சம்பந்தப்பட்ட நடிகர் மீது மலையாள நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட வர்த்தக சபை ஆகியவையிடம் புகார் அளித்தார். ஆனால் அந்த நடிகரின் பெயரை வெளியில் சொல்லவில்லை. 

இருப்பினும், சபையின் பொதுச் செயலாளர் சஜி நந்தியாட்டு, அந்த நடிகரின் பெயரை வெளியில் தெரிவித்துவிட்டார். மேலும் அந்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதன் மூலம் நடிகை வின்சிக்கு தொந்தரவு கொடுத்தது ஷைன் டாம் சாக்கோ எனத் தெரியவந்தது. இவர் தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படங்களில் நடித்திருந்தார். பையின் பொதுச் செயலாளர் தெரிவித்ததை அடுத்து நடிகை வின்சி தனது நம்பிக்கையை சபை மீறியதாக கூறி அவர்களுடன் இனி இந்த விவகாரம் தொடர்பாக ஒத்துழைக்கப் போவதில்லை எனக் கூறியிருந்தார். பின்பு இந்த விஷயத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போக விருப்பமில்லை எனவும் சொன்னதாக ஒரு தகவல் இருக்கிறது. 

447

Advertisment

ஷைன் டாம் சாக்கோ அத்துமீறிய சம்பவம் வின்சியுடன் அவர் நடித்த ‘சூத்ரவக்யம்’ படத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இப்படம் தற்போது ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. ஜுலை 11ஆம் தேதி வெளியாகவுள்ளதால் படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழுவினர் கவனித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்திற்குப் பிறகு வின்சியும் ஷைன் டாம் சாக்கோவும் ஒன்றாக சூத்ரவக்யம் படம் ரிலீஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் காணப்பட்டனர். அப்போது ஷைன் டாம் சாக்கோ, வின்சி முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக மன்னிப்பு கேட்டார். அவர் பேசியதாவது, “என்ன நடந்ததோ அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டாக சொன்னனே தவிர எந்த தீய நோக்கத்துடன் செய்யவில்லை” என்றார். 

பின்பு நடிகை வின்சி பேசுகையில், “அப்போது நான் மிகவும் வேதனையடைந்தேன், மேலும் எனது எதிர்வினை அவரது குடும்பத்தினருக்கு வேதனையை ஏற்படுத்தியதற்கு வருந்துகிறேன். இப்போது பிரச்சனை முடிந்துள்ளது” என்றார். சமீபத்தில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை கார் விபத்தில் இறந்திருந்தார். ஷைன் டாம் சாக்கோவும் அந்த விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.