பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தற்போது ‘கேடி தி டெவில்’ என்ற கன்னட படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தமிழ் உட்பட இன்னும் பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக நாளை(04.09.2025) வெளியாகவுள்ளது. இதனிடையே சமீபத்தில் ஒரு மோசடி வழக்கில் சிக்கினார். தீபக் கோத்தாரி என்ற தொழிலதிபர், ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் ரூ.60 கோடி தன்னிடம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்தார். இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது பொருளாதார குற்றப்பிரிவில் விசாரணையில் உள்ளது. 

Advertisment

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டி, மும்பையில் அவர் நடத்தி வந்த ‘பாஸ்டியன் பாந்த்ரா’ என்ற  ரெஸ்டாரண்டை மூடுவதாக அறிவித்துள்ளார். நாளையுடன் மூடவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த ரெஸ்டாரண்ட் தனக்கு நிறைய நினைவுகளை தந்துள்ளதாக நெகிழ்ந்துள்ளார். மேலும் நெருங்கிய வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டத்துடன் சிறப்பு விருந்து இன்று இரவு இருக்கும் என்றும் அதே சமயம்  அடுத்த வாரம் ‘பாஸ்டியன் அட் தி டாப்’ என்ற பெயரில் புது ரெஸ்டாரண்ட் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மூடப்படவுள்ள இந்த ரெஸ்டாரண்ட் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்பகுதியில் முக்கிய ரெஸ்டாரண்டாக இது கருதப்பட்டது. குறிப்பாக கடல் வகை உணவுகளுக்கு இந்த ரெஸ்டாரண்ட் பிரபலம் என சொல்லப்படும் நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய ஆளுமைகளும் அடிக்கடி வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஷில்பா ஷெட்டியின் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.