பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கடைசியாக ராஜ்குமார் ஹிரானியின் ‘டங்கி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை அடுத்து சித்தார்த் ஆனந்த இயக்கத்தில் ‘கிங்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிக்கிறார். இப்படம் தான் இவர் நடிப்பில் முதல் முறையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக ‘தி ஆர்ச்சீஸ்' என்ற படத்தில் நடித்திருந்தார், இது நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் கிங் படத்தில் ஷாருக்கான், சுஹானா கானைத் தவிர்த்து, தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அதிக ஆக்‌ஷன் நிறைந்த படமாக இந்தப் படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருவதாக் சொல்லப்படுகிறது. அந்த படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அதில் நடித்த ஷாருக்கானுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் லேசான காயம் தான் என்றும் இப்போது நலமுடன் இருக்கிறார் என்றும் பரவலாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

காயம் ஏற்பட்டதை தொடர்ந்து ஷாருக்கான், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று, பின்பு அங்கிருந்து தன் குடும்பம் இருக்கும் இங்கிலாந்துக்கு சென்று தற்போது ஓய்வெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் முழுமையாக மீண்ட பிறகு கிங் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.