
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அதிக இடங்களைப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனாலும், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியால் 10 நாட்களாக கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் வந்த நிலையில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், மகாராஷ்டிராவின் மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றுள்ளார். பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்று கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழாவில் ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவர்களை தவிர்த்து பாலிவுட் திரை பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், வித்யா பாலன் மற்றும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூர், விக்கி கௌஷல், ஷிகர் பஹாரியா, ஜான்வி கபூர், போனி கபூர், குஷி கபூர், அர்ஜுன் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.