கரோனா பாதிப்பிலிருந்து மக்களைக்காப்பாற்ற பல திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர்.அண்மையில் சல்மான் கான் திரைத்துறையில் பணிபுரியும் 25,000 ஊழியர்களுக்கு நிதியுதவி செய்தார்.அவரை தொடர்ந்து பாலிவுட்டின் 'கிங் கான்' என்று அழைக்கப்படுகிற ஷாருக் கான், பல நிவாரண உதவிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
ஷாருக் கான் முதல் கட்டமாக மும்பை, நியூ டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட மூன்று பெரிய நகரங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும், என்னென்ன மாதிரியான நிவாரண உதவிகளைச் செய்ய இருக்கிறது அவருடைய நிறுவனங்கள் என்பதையும் விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
1. பி.எம் கேர்ஸ் நிதி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணி மூலம் இதற்கு நிதி தரப்படும்.
2. மகாராஷ்டிர முதல்வர் நிவாரண நிதி: ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் இதற்கு நிதி தரப்படும்.
3. சுகாதாரத் துறையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள்: கேகேஆர் மற்றும் மீர் அறக்கட்டளை சேர்ந்து,மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிர அரசுடன் இணைந்து, 50,000 பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்கும்.
4. ஏக் சாத் - தி எர்த் ஃபவுண்டேஷன்: மீர் அறக்கட்டளையும்,ஏக் சாத்தும் இணைந்து மும்பையில் குறைந்தது ஒரு மாதத்துக்கு 5,500 குடும்பங்களுக்குத் தினசரி உணவு அளிக்கும்.
5. ரோடி ஃபவுண்டேஷன்: மீர் அறக்கட்டளை, ரோடி அறக்கட்டளையோடு சேர்ந்து குறைந்தது ஒரு மாதத்துக்கு, தினமும் 10,000 பேருக்கு 3 லட்சம் உணவுப் பொட்டலங்களைத் தரும்.
6. வொர்க்கிங் பீபில்ஸ் சார்டர் அமைப்புடன் சேர்ந்து மீர் அறக்கட்டளை, குறைந்தது ஒரு மாதத்துக்கு, டெல்லி முழுவதும் உள்ள, அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் 2500 தினக்கூலிப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களைத் தரும்.
7. ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு: மீர் அறக்கட்டளை, ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பார்த்துக் கொள்ள மாதாந்திர உதவித்தொகை தரும். இதற்காக உத்தரப் பிரதேசம், டெல்லி, பிஹார், மேற்கு வங்கம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருப்பவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.