விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மகாராஜா. இப்படம் திரையரங்குகளில் மட்டுமின்றி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இன்றளவும் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியிருந்தனர். மேலும் இப்படத்திற்காக சமீபத்தில் நடந்த மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நித்திலன் சாமிநாதனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்று வரும் நித்திலன், சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் மகாராஜா படத்தின் கதையை முதலில் நடிகர் சாந்தனுவிடம் சொல்லியதாக தெரிவித்திருந்தார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், பலரும் இப்படிப்பட்ட கதையை சாந்தனு மிஸ் செய்துவிட்டார் என அந்த வீடியோவின் கீழ் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த வீடியோவிற்கு தனது எக்ஸ் பக்கத்தில் சாந்தனு பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோ குறித்த சாந்தனு பதிவில், “முதலில் நித்திலன் இந்த படத்தை உயிர்ப்பித்து, உலகளவில் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். முன்பு நான் இந்த படத்தின் கதை தேர்ந்தெடுத்தது எனக்கு ஊக்கமளிக்கிறது. இப்போது 10 ஆண்டுகள் கழித்தும், இதைப் பற்றி நித்திலன் பேசியிருப்பதை நம்ப முடியவில்லை. அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அதேபோல் இந்த வீடியோ பதிவின் கீழ், நான் இந்த கதையை நிராகரித்ததில் என்னுடைய அப்பா சம்பந்தப்பட்டதாகக் கூறி, அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் நித்திலனிடம் கதை கேட்டது என் அப்பாவுக்கே தெரியாது. கதை கேட்ட நேரத்தில், தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை. ஆனால், இப்போது கதைதான் ராஜா என மீண்டும் நிரூபனமாகியுள்ளது. நான் எப்போதுமே சிறந்த கதைகளைத்தான் தேர்வு செய்து வருகிறேன். காலம் பதில் சொல்லும்...” என்று குறிப்பிட்டுள்ளார்.