/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/238_5.jpg)
பிரபல ஹாலிவுட் இயக்குநரான டாரண்டினோ இயக்கத்தில் லியானர்டோ டிகாப்ரியோ, ப்ராட் பிட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’. 1960 காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட இப்படம் ஹாலிவுட் நடிகை ஷாரோன் டேட்ஸ் கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தில் நடிகர் ப்ரூஸ் லீயை அவமானப்படுத்திவிட்டார்கள் என அவரது மகள் ஷேனன் லீ படம் வெளியான சமயத்திலேயே இயக்குநர் டாரண்டினோவைக் கடுமையாக விமர்சித்தார். அப்போது இது குறித்து டாரண்டினோ எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட டாரண்டினோவிடம் இது குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த டாரண்டினோ, ''ஷேனன் லீயைப் பொறுத்தவரை அவருக்கு ப்ரூஸ் லீ தந்தை. ஆனால், மற்றவர்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை'' எனக் காட்டமாகக் கூறினார். இந்த நிலையில், டாரண்டினோவின் இந்தக் கருத்திற்கு ஷேனன் லீ பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "என் தந்தை பற்றி தவறான முறையில் காட்டப்பட்டிருப்பது குறித்து நான் கவலைப்படுகிறேன் என ஒப்புக்கொண்டதற்கு டாரண்டினோவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ப்ரூஸ் லீ யாரென்று எனக்குப் பாடமெடுக்கும் ஹாலிவுட் வெள்ளைக்காரர்களால் நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன்" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)