
விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர், “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார்.
இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.