
தே.மு.தி.க முன்னாள் தலைவர் மறைந்த விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் புதிதாக நடித்துள்ள படம் ‘படை தலைவன்’. யு. அன்பு இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் முன்னதாக வெளியான நிலையில் ஒரு யானைக்கும் அதனுடைய பாகனுக்கும் இடையிலான உறவை பழங்குடியின மக்களின் வாழ்வியல் பின்னணியில் ஆக்ஷன், எமோஷன் கலந்து இப்படம் உருவாகியிருப்பது போல் தெரிந்தது.
ட்ரைலரின் இறுதியில் விஜயகாந்த் முகம் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அவரின் பிரபல பாடலான ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்...’ பாடல் பின்னணியில் ஒலித்திருந்தது. இதனால் இப்படத்திற்கு விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. பின்பு புரொமோஷன் பணிகளிலும் சண்முக பாண்டியன் ஈடுபட்டிருந்தார்.
இப்படம் நாளை(23.05.2025) வெளியாகவுள்ள நிலையில் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த அவர், “அனைவருக்கும் வணக்கம், படை தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும்; உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படம் ஏற்கனவே இரண்டு முறை வெளியாவதாக அறிவித்து பின்பு தள்ளி போனது குறிப்பிடத்தக்கது.